வானதிக்கு எதிராக திவ்யா சத்யராஜ்? சூடுபிடிக்கும் 2026 களம்!
Author: Hariharasudhan1 February 2025, 11:39 am
தலைமை சீட் கொடுத்தால், கோவையில் போட்டியிட விருப்பம் என திவ்யா சத்யராஜ் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை: திரைப்பட நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், சமீபத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தொடர்ந்து, அவர் திமுக தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள திவ்யா சத்யராஜ், “ எனக்கு சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம் உண்டு. 2024 மக்களவைத் தேர்தலின் போதும், நிறையக் கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், எனது அம்மாவின் உடல்நல பாதிப்பு காரணமாக அரசியல் வருகையை அப்போது ஒத்திவைத்தேன்.
அரசியலில் எனக்கு நிறைய கனவுகளும், ஆசைகளும் இருக்கிறது. 2026ஆம் ஆண்டில் எனக்கு சீட் கொடுங்கள் என்று நான் கேட்கவில்லை. ஆனால், தலைவர் ஸ்டாலின் முடிவு செய்து சீட் கொடுத்தால், நான் கண்டிப்பாக கொங்கு மண்டலத்தில் கோவையில் போட்டியிட விருப்பப்படுகிறேன்.
கோவையில் மகிழ்மதி இயக்கம் சார்பில் ஏராளமான நலத்திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம். இனி திமுக உடன் இணைந்து அந்தப் பணிகளைத் தொடர்வோம். அந்த வகையில், கோவை மேயராகவோ, (இடஒதுக்கீடு மாறினால்) சென்னை மேயராகவோ வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. தவிக்கும் நகைப்பிரியர்கள்!
மேலும், மகிழ்மதி இயக்கம் என்பது, கரோனா தொற்றுக்கு முன்னதாக, தனது அம்மாவின் பெயரில் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனம் என்றும், இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச ஊட்டச்சத்து வழங்கி வந்ததாகவும் திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.