தீபாவளி முடிந்து 3 நாட்களாகியும் அகற்றப்படாத குப்பைகள்… மலைபோல் தேங்கியதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ; பொதுமக்கள் அச்சம்..!!!

Author: Babu Lakshmanan
14 November 2023, 4:04 pm
Quick Share

தீபாவளி பண்டிகை முடிந்து மூன்று நாட்களாகியும் வத்தலக்குண்டில் குப்பைகள் அகற்றப்படாததால், நகர் முழுவதும் மலைபோல் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மிக வேகமாக வளர்ந்து வரும் சிறப்பு நிலை பேரூராட்சியாகும். தற்போது, தீபாவளி பண்டிகை முடிந்து மூன்று நாட்களாகியும், முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மலைபோல் தேங்கியுள்ள குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாததால் நகர் முழுவதும் ஆங்காங்கே குப்பைக்கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசுக்கள் உருவாகி தலைவலி, வாந்தி, மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தெரு ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகழிவுகளை தெரு நாய்கள் கிளருவதால் நாய்களுக்குள் சண்டை ஏற்பட்டு, பொதுமக்கள் குழந்தைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருநாய்களால் விபத்துகளும் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல, தேனி-மதுரை முக்கிய சாலையில் உள்ள உணவக கழிவுகள் மட்டுமல்லாது வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள், கழிவுகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளதால், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்லும் அவள நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே, இப்பேரூராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்வதற்காக மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் உட்பட 70-ற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தும், பொதுமக்கள் தொடர்ந்து புகாரளித்தும் வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை அகற்றாததால் திரும்பும் இடமெல்லாம் குப்பை மயமாகவே காட்சி அளித்து வருகிறது.

மழைக்காலத்தில் நகர் முழுவதும் மலைப் போல் தேங்கியுள்ள குப்பையால் குடியிருப்பு வாசிகள், பொதுமக்க மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 349

    0

    0