களைகட்டிய தீபாவளி ஆட்டு வியாபாரம்… ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை.. வியாபாரிகள் மகிழ்ச்சி!
Author: Babu Lakshmanan21 October 2022, 1:07 pm
புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம் விராலிமலை பொன்னமராவதி கந்தர்வகோட்டை, கீரனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை தங்களின் தீபாவளி செலவை முன்னிட்டு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காரைக்குடி தேவகோட்டை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக வியாபாரிகள் வேன்களில் வருகை புரிந்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கு ஆட்டுச்சந்தை கூடியது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கி வேனில் ஏற்றி சென்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிக அளவில் இருந்தது. அதே நேரத்தில் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் ஆடுகளை வளர்த்து வந்த விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வியாபாரிகளுக்கும் தீபாவளியை ஒட்டி நல்ல விலை கிடைக்கும் என்பதாலும், வியாபாரம் மும்முரமாக நடைபெறும் என்பதாலும், வியாபாரிகளும் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். ஆட்டுச்சந்தையானது புதுக்கோட்டை நகரில் வாரவாரம் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
இந்த வாரமும் இன்று நடைபெற்றது. ஆனால் எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு இந்த வார ஆட்டுச் சந்தையில் வியாபாரம் ரூ. 3 கோடியை தாண்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.