‘ஐயா இங்க இருந்த பஸ்-ஸ்டாப்ப காணோம்’.. திமுக கூட்டணி எம்.பி நவாஸ் கனியின் சொந்த ஊரில் குளறுபடி… வைரலாகும் போஸ்டர்..!!
Author: Babu Lakshmanan9 January 2024, 7:12 pm
திமுக கூட்டணி கட்சி எம்.பி .யின் சொந்த ஊரில் பயணியர் நிழற்குடையை காணவில்லை என கிராம பொதுமக்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள குருவாடிதான் எம்.பி.நவாஸ்கனி பிறந்த ஊர். இங்குதான் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். டெல்லி, சென்னை மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் நாட்கள் தவிர மீதி நாட்களில் இங்குதான் இருப்பார்.
இந்த குருவாடி கிராமத்தில் கட்டிய பயணியர் நிழற்குடையை காணவில்லை என அக்கிராம பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும், சாயல்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் நிழற்குடையை காணவில்லை எனவும், கடந்த 14-09 -2023 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளதாக அளித்த தகவலையும் மேற்கோள்காட்டி ஒட்டிய சுவரொட்டிகளால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இது தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக்காட்சியில் ‘அய்யா இங்க இருந்த கிணத்தை காணோம்’ என காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.
மேலும், இந்த குருவாடி கிராமத்தை உள்ளடக்கிய அதாண்டை ஊராட்சி மன்ற தலைவராக திமுக கூட்டணி கட்சி எம்.பி நவாஸ் கனியின் தாயார் ரம்ஜான் பீவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்பி நவாஸ் கனி பிறந்து, வளர்ந்து குடியிருந்து வரும் இந்த குருவாடி கிராமத்தில், அவருடைய தாயாரே ஊராட்சி மன்ற தலைவராகவும் பதவி வகுத்து வரும் நிலையில், அந்த ஊரில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையை காணவில்லை என அந்தப் பகுதி பொதுமக்கள் கிண்டல் செய்யும் விதமாக, சுவரொட்டி ஒட்டி உள்ள சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட அரசியலில் பெரும் பேசு பொருளாகி உள்ளது.