சேலத்தில் ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம்… திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைது..!!

Author: Babu Lakshmanan
11 January 2024, 5:55 pm

சேலம் ; பெரியார் பல்கலைக்கழகம் வருகை புரிந்த ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி சென்னையில் இருந்து விமான மூலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தார். பின்னர் அவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வந்து அங்கு நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, கார் மூலம் கோவைக்கு திரும்புகிறார்.

இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு ஆளுநர் ஆதரவு தருவதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் திரளாக தற்போது திரண்டனர். இதில் திமுக, கம்யூனிஸ்ட் மற்றும் தி.கவினர் உள்ளிட்ட கட்சியினர் மற்றும் அமைப்பினர் பங்கேற்று உள்ளனர்.

இதனை அடுத்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்புறமும் மறியல் செய்ய திரண்டுள்ள பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. திரளானோர் தமிழ்நாடு ஆளுநரை முற்றுகையிட அறிவித்து திரண்டதால் பெரியார் பல்கலைக்கழகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக ஆளுநரை கண்டித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்கலைக்கழகம் முன்பு நூற்றுக்கணக்கான பல்வேறு அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்,

இதன் காரணமாக பெரியார் பல்கலைக்கழகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பெரியார் பல்கலைக்கழகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 395

    0

    0