ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்த திமுக… கைக்கோர்த்த கூட்டணி கட்சி!!!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2023, 3:50 pm
நீட் தேர்வு விலக்குக்கு நான் ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன். |அந்த அதிகாரம் எனக்கு இருந்தால் நிச்சயம் மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ரவி பேசியதை கண்டித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது, காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நமது நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி நாளை (ஆகஸ்ட் 15-ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கின்றோம்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தவும், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடவும், செயல்படவும் முனைகிறார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஒருமனதாக இயற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழக சட்ட மசோதா உள்ளிட்ட தமிழ்நாடு மக்கள் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், இயற்றப்பட்ட பல முக்கிய சட்ட மசோதாக்களுக்கு வேண்டுமென்றே காலதாமதம் செய்து அவற்றை கிடப்பில் போட்டு வைத்துள்ளார்.
இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக நாளை (15.08.2023) அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம்.’என தெரிவிக்கப்பட்டுள்ளது.