2வது முறையாக டெண்டரில் பங்கேற்க வந்த ஒப்பந்ததாரர்களிடம் திமுகவினர் ரகளை : வேடிக்கை பார்த்த போலீசார்.. ஒப்பந்ததாரர்கள் கைது!!
Author: Udayachandran RadhaKrishnan28 June 2022, 5:07 pm
திண்டுக்கல் : பழனியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு இன்று டெண்டர் விடப்பட்ட நிலையில் டெண்டரில் கலந்து கொள்ள வருகை தந்த ஒப்பந்ததாரர்களை திமுகவினர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி ஆத்தூர் தாலுகா நரசிங்கபுரம் அணைக்கட்டு ஷட்டர் பழுதுநீக்கம் மற்றும் கால்வாய் நவீனப்படுத்துதல் 75லட்சம் ரூபாய் உள்பட 8பணிகளுக்கு மொத்தம் 11கோடியே 17லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏலம் விடப்படுகிறது.
கடந்த மாதம் 27ம்தேதி ஏலம் நடைபெறவிருந்த நிலையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒப்பந்ததாரர்களின் கார்கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து ஏலம் ஒத்திவைக்கப்பட்டு இன்று மீண்டும் ஏலம் நடத்த அறிவிக்கப்பட்டுளள் நிலையில் இன்று மாலை 3மணிவரை டெண்டர் போட பொதுப்பணித்துறை அனுமதித்துள்ளது.
இந்நிலையில் கடைசி நாளான இன்று பல்வேறு ஊர்களில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்க வந்தனர். பொதுப்பணித்துறை அலுவலகத்தில் டெண்டர் போடுவதற்கு ஒப்பந்ததாரர்கள் வந்தபோது அலுவலக வாயிலிலேயே பழனி நகராட்சி கவுன்சிலர் வீரமணி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட திமுகவினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒப்பந்ததாரர்கள் கையிலிருந்த டெண்டர் பையை கவுன்சிலர் வீரமணி பிடுங்கிக் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் முன்னிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு போலீசார் கண்டும் காணாமல் அமைதியாக வேடிக்கை பார்த்ததை அடுத்து ஆவேசமடைந்த ஒப்பந்ததாரர்கள் பழனி-திண்டுக்கல் சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அங்குவந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் டெண்டர் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குள் அனுமதிக்குமாறு போலீசாரிடம்
கேட்டபோது போலீசார் அனுமதி மறுத்ததால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஒப்பந்ததாரர்களை கலைந்துபோக சொன்னபோது அவர்கள் மறுத்து பாதுகாப்பு தரவேண்டிய காவல்துறையினர் ஒருதரப்பிற்கு சாதகமாக நடந்து கொள்வதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் ஒப்பந்ததாரர்களை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
0
0