‘அதிமுக ஆட்சியில் கூட மரியாதை இருந்துச்சு’… கோவை திமுக மேயரை கண்டித்து வெளிநடப்பு செய்ய முயன்ற திமுக கவுன்சிலர்..!!

Author: Babu Lakshmanan
31 August 2023, 3:55 pm

கோவை மாநகராட்சி சாதாரண மாமன்ற கூட்டத்தில் மாநகர மேயருக்கும், திமுக கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் சாதாரண மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா ஆன்ந்த்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் துவங்கியவுடன் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுவதற்கு மேயர் கல்பனா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் மறந்தனர். இதனையடுத்து, கவுன்சிலர்கள் சிலர் அதனை சுட்டி காட்டிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

கூட்டம் துவங்கியவுடன் மாநகர பகுதிகளில் நடைபெறும் பணிகள் மந்தகதியில் நடப்பதாக அதிமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். அப்பொழுது, அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கும், மேயருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மாநகராட்சி கூட்டம் தாமதமாக துவங்கியதாக கூறிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், மிச்சர் சாப்பிடுவதற்காக மாநகர மன்றத்திற்கு வருகிறோம் என காட்டமாக எழுப்பினார். அதற்கு 10 ஆண்டுகளாக நீங்கள் மிச்சர் சாப்பிட்டீர்களா..? என மேயரும் பதிலுக்கு பேசினார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நீண்டதால் பரபரப்பு நிலவியது.

இதனைதொடர்ந்து, பேசிய திமுக கவுன்சிலரும், மத்திய மண்டல தலைவருமான மீனாலோகு, தங்களது மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாக குற்றம் சாட்டினார். அப்பொழுது திமுக மேயர் கல்பனாவிற்கும், திமுக மண்டல தலைவர் மீனா லோகுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மாநகராட்சி மன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ய போவதாகவும் அதிமுக ஆட்சியில் கவுன்சிலராக இருந்த போது கூட மரியாதையாக நடத்தினார்கள், இப்போது வன்மத்துடன் மேயர் செயல்படுவதாகவும் கூறி மீனா லோகு, வெளிநடப்பு செய்ய போவதாக தெரிவித்து வெளியேற முயன்றார்.

https://player.vimeo.com/video/859711607?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

அப்போது அவரை திமுக கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தி அமர வைத்ததுடன், மண்டல தலைவரின் கோரிக்கைகளை மேயர் கல்பனா செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். திமுக மண்டல தலைவரே திமுக மேயரை எதிர்த்து வெளிநடப்பு செய்ய முயன்றது சக திமுக கவுன்சிலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 342

    0

    0