மேடையில் திமுக கவுன்சிலரின் கணவருக்கு இருக்கை… அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை..!!
Author: Babu Lakshmanan17 February 2024, 8:46 am
கரூரில் மாவட்ட ஆட்சியர், எம்.பி ஜோதிமணி, அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலரின் கணவருக்கு மேடையில் இருக்கை போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் மற்றும் கலை பண்பாட்டு இயக்ககம் சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தப்பாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, நிகழ்ச்சியின் துவக்க விழாவில் மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகராட்சி ஆணையர், மண்டல தலைவர் உள்ளிட்ட பலருக்கு மேடையில் போடப்பட்ட இருக்கைகளில் அவர்களுக்கு இணையாக 39வது வார்டு கவுன்சிலரான சூரியகலா என்பவருக்கு இருக்கை போடப்பட்டிருந்தது.
ஆனால், நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் வராத நிலையில், அவரது கணவர் பாண்டியன் மேடை ஏறி அந்த இருக்கையில் அமர்ந்தார். அந்த சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காதது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
0
0