திமுக கவுன்சிலருக்கு கத்திகுத்து… திமுக எம்எல்ஏ மகன் மீது பரபரப்பு புகார்… சொந்த கட்சிக்குள்ளேயே கோஷ்டி மோதல்..!!
Author: Babu Lakshmanan13 October 2022, 4:49 pm
ராமநாதபுரம் : திமக கவுன்சிலரை கத்தியால் குத்தியதாக திமுக எம்எல்ஏ மகன் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளராக எம்எல்ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பரமக்குடி வந்த அவரை வரவேற்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில், பரமக்குடி 5வது வார்டு திமுக நகர்மன்ற உறுப்பினரான பாக்யராஜ் பேனர் ஒன்றை வைத்துள்ளார்.
அந்த பேனரில் உள்ளூர் எம்எல்ஏவான முருகேசனின் புகைப்படம் போடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், எம்எல்ஏ முருகேசன் தரப்பினர் கடுப்பில் இருந்துள்ளனர். இது தொடர்பாக, எம்எல்ஏவின் உறவினர் விக்கி (எ) விக்னேஷ் என்பவர் பாக்யராஜை திட்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால், அதிருப்தியடைந்த பாக்யராஜ், எம்எல்ஏ முருகேசனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, சொந்த பணத்தில் பேனர் வைத்திருப்பதால், உங்களின் புகைப்படத்தை எதற்காக போட வேண்டும் என்று பாக்யராஜ் கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த எம்எல்ஏ முருகேசன், “ஓ அப்படியா, நீயா நானா பார்போம், உன் பலத்தையும் என் பலத்தையும் பார்ப்போம்,” என கூறியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பரமக்குடியில் பள்ளிகளில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ முருகேசன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர். அப்போது, பேனரில் படம் போடாதது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கவுன்சிலர் பாக்யராஜ், பரமக்குடி வடக்கு நகர செயலாளர் ஜீவானந்தம் ஆகியோரை எம்எல்ஏவின் ஆதரவாளர்களாக சொல்லப்படுபவர்கள் 3 கார்களில் பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் மடக்கியுள்ளனர். பின்னர், பாக்யராஜை தாக்கி கத்தியால் விலாவில் குத்திவிட்டு தப்பிஒடியுள்ளனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தற்கு சென்ற போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ மகன் துரைமுருகன், அவரது உறவினர் விக்கி உள்ளிட்ட 25 நபர்கள் மீது பாக்கியராஜ் புகார் அளித்துள்ளார். அதேபோல், தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாக்கியராஜ், ஜீவானந்தம், மதுசூதனன் ஆகியோர் மீது விக்கி புகார் அளித்துள்ளார்.
இருதரப்பு புகார் தொடர்பாக பரமக்குடி நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.