திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கு… தம்பதி குண்டர் சட்டத்தில் கைது ; மாவட்ட ஆட்சியர் அதிரடி
Author: Babu Lakshmanan27 December 2023, 6:28 pm
கரூரில் நடந்த திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகேயுள்ள சென்னசமுத்திரம் பேரூராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் ரூபா (47). இவர் கரூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலைக்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கரூர் மாவட்டம், பவித்திரம் பாலமலை காட்டுப்பகுதியில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி தலையில் காயங்களுடன் ரூபா கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். க.பரமத்தி போலீஸார் ரூபாவுடன் வீட்டு வேலைக்கு செல்லும் ஈரோடு மாவட்டம், சாலைப் புதூரை சேர்ந்த நித்யா (33), கதிர்வேல் (37) தம்பதியை செப். 27ம் தேதி பிடித்து விசாரித்தனர்.
ரூபா தங்க செயின்கள், மோதிரம், கம்மல், காது மாட்டல்களுடன் வேலைக்கு வருவதால் நகைக்காக ஆசைப்பட்டு பவித்திரத்தில் ஒரு வீட்டில் வேலை இருப்பதாகக் கூறி நித்யா மற்றும் அவரது கணவர் கதிர்வேல் ஆகியோர் ரூபாவை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று, அவரை கொடூரமாக தாக்கிக் கொலை செய்துள்ளனர். மேலும், அவரிடமிருந்து 7 பவுன் சங்கிலி, தோடு, கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் கைது செய்து நகைகளை மீட்டு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொலையாளிகளான நித்யா – கதிர்வேல் ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் பரிந்துரையின் பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திமுக பெண் கவுன்சிலர் ரூபா கரூரில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது குறிப்பிடத்தக்கது.