திமுக கவுன்சிலர் பதவி பறிப்பு? கள்ள ஓட்டு பதிவு செய்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் கூறிய அதிரடி உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2022, 5:45 pm
திருச்சி : திமுக மாமன்ற உறுப்பினர் மீது சுயச்சை வேட்பாளர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நேரில் ஆஜராக திமுக மாமன்ற உறுப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. அப்போது திருச்சி மாநகராட்சி 56 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மஞ்சுளாதேவி, திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 647ம் எண் வாக்குச்சாவடியில், வரிசை எண் 673 ல் உள்ள முத்துலெட்சுமி என்பவரது வாக்கை, கையெழுத்திட்டு தவறுதலாக கள்ள ஓட்டாக பதிவிட்டதாக குற்றசாட்டு எழுந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த மற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பாலாஜி புகார் தெரிவித்தார். மேலும் இரண்டு வாக்கை பதிவு செய்த திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி இடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் உண்மை நிரூபிக்கும் பட்சத்தில் 56 வது வார்டில் வேட்பாளர் பட்டியலில் இருந்து அவர் நீக்கம் செய்யப்படுவார் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட கருமண்டபம் ஆர்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த கவிதா பெருமாள் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது.
கடந்த 19.02.2022-ம் தேதி நடைபெற்று முடிந்த தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 56-வது வார்டில் நான் தீப்பெட்டி சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டேன். அந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளராக பாலசுப்பிரமணியன் மனைவி மஞ்சுளா தேவி என்பவர் 56-வது வார்டு தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
வாக்கு பதிவின் போது தி.மு.க. வேட்பாளர் 56-வது வார்டுக்குட்பட்ட கருமண்டபம் ஆரம்ப பள்ளி வாக்குச்சாவடி பாகம் 646 மற்றும் 647 ஆகிய இரண்டு வாக்குச்சாவடிகளிலும் கள்ள ஓட்டுகள் போட்டதோடு மட்டுமல்லாமல் 56-வது வார்டுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அவரது ஆதரவாளர்களால் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு மஞ்சுளா தேவி வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நான் இரண்டாம் இடம் பிடித்துள்ளேன். மஞ்சுளா தேவி கள்ள ஓட்டு போட்டதால் அவர் வகிக்கும் கவுன்சிலர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரியும், அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரியும், இரண்டாம் இடம் பிடித்துள்ள என்னை வெற்றி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
இதனையெடுத்து இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி திமுக கவுன்சிலர் மஞ்சுளா தேவி, திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர், மாநில தேர்தல் ஆணையர் ஆகியோர், வரும் ஜூன் 10ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
0
0