தனியார் பார் அமைக்க கடையை காலி செய்ய கூறி திமுக கவுன்சிலர் மிரட்டல்…. கடையை சூறையாடி அராஜகம் : புகாரை ஏற்க மறுத்ததால் பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி!!
Author: Udayachandran RadhaKrishnan6 June 2022, 2:06 pm
தனியார் பார் அமைக்க கடையை காலி செய்ய கூறி மிரட்டியதால் பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முகமது சாதிக் பாஷா (வயது 34). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோத்தகிரி சாலையில் அலுவலகம் அமைத்து வீட்டு மனைகளை விற்று வருகிறார்.
இந்த நிலையில் இவரது அலுவலகத்தை ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நபர்கள் காலி செய்யக்கோரி நிர்ப்பந்தித்து வருவதாக தெரிகிறது. இதனால் இவர் சற்று கால அவகாசம் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி இவரது அலுவலகத்தில் புகுந்து நபர்கள் இவரது அலுவலகத்தை அடித்து உடைத்து அதில் இருந்த பொருட்கள் எல்லாம் எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
இது சமந்தமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகதை நாடினார்.
அங்கும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த முகமது சாதிக் பாஷா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
இந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் அலுவலகத்தை காலி செய்ய உரிமையாளர் நிர்பந்தித்துள்ளதும், அந்த இடத்தில் 21வது வார்டு திமுக கவுன்சிலர் நவீன் மற்றும் திமுக நிர்வாகிகள் தனியார் பார் அமைக்க உள்ளதும் தெரியவந்தது.
கடையை காலி செய்ய சாதிக் ஒப்புக்கொண்ட நிலையில், 2 மாதம் அவகாசம் கேட்டுள்ளதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக நிர்வாகிகள் அலுவலகத்தை சூறையாடியதாகவும் கூறியுள்ளார்.