‘நக்கலா பேசுறீங்களா…?’ திருச்சி திமுக மேயரால் அதிருப்தி… மாநகராட்சி கூட்டத்தில் இருந்து திமுக கவுன்சிலர் வெளிநடப்பு
Author: Babu Lakshmanan28 October 2022, 2:00 pm
திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து மேயரை எதிர்த்து திமுக கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி அவசர கூட்டம் முதலில் நடந்தது. இதை தொடர்ந்து, சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலரும், நகரமைப்புக்குழு தலைவருமான கொட்டப்பட்டு தர்மராஜ் பேசுகையில், 48-வது வார்டுக்கு உட்பட்ட பொன்மலைப் பகுதியில் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளது. இதில் நமக்கு சொந்தமான இடத்தை அளந்து ஆக்கிரமிப்பினை அகற்ற வேண்டும் என பேசினார்.
இதற்கு மேயர் தரப்பில் பதிலளித்து பேசியதாவது :- கவுன்சிலர் தர்மராஜ் கூட்டத்தில் பேசும்போது, தாங்கள் (மேயர்) டேப் எடுத்துக்கொண்டு அளந்து பார்த்து சொல்லுங்கள் எனக் கூறினீர்கள். இது நக்கலான பதிலாக நான் பார்க்கிறேன். இப்போது நீங்கள் அதிகாரியை அனுப்புங்கள் என கோபமாக கூறினார்.
உடனே பதிலளித்த தர்மராஜ், மேயர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றும், நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்றும், கட்சி கூட்டத்தில் பேசியதை மன்றத்தில் பேசுவதும், மன்றத்தில் பேசுவதை கட்சிக் கூட்டத்தில் பேசுவதும் தவறான நடைமுறை, என்றார்.
இதைத் தொடர்ந்து, திமுக கவுன்சிலர் கொட்டப்பட்டு தர்மராஜ் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனால், மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.