‘கட்சியில் மரியாதையே இல்ல.. திமுக கூட்டத்தில் தற்கொலை செய்ய போறோம்’ ; CM ஸ்டாலினுக்கு பட்டியலின திமுக சேர்மன் கண்ணீர் கடிதம்!!

Author: Babu Lakshmanan
18 February 2023, 2:32 pm

தென்காசி ; மக்கள் பணியை செய்ய விடுவதில்லை என்றும், கட்சியிலும் மரியாதை இல்லை என்பதால் திமுக பொதுக்கூட்டத்தில் தீக்குளிக்க போவதாக திமுக தலைமைக்கு கடையம் ஒன்றிய பட்டியலின திமுக சேர்மன் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றிய சேர்மனாக செல்லம்மாள் என்பவர் இருந்து வருகிறார். திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக கடந்த ஆண்டு பேட்டி கொடுத்து பரபரப்பானவர் ஆனார். தற்போது தமக்கு அரசு பதவி, கட்சி என எதிலும் தனக்கு மரியாதை இல்லை என்று கூறி வந்தார்.

இந்த நிலையில், அவர் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், ஒவ்வொரு யூனியன் கூட்டத்திலும் தன்னை மட்டம் தட்டி பேசுவதிலேயே குறியாக கொண்டிருப்பதாகவும், தன்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு பெண் என்று கூட பார்க்காமல் துன்புறுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கவுன்சிலர்களிடமும் மரியாதை இல்லை என்றும், எனது கணவர் 35 ஆண்டு காலமாக கட்சிக்காக போஸ்டர் ஒட்டுவது முதல் அனைத்து பணிகளையும் செய்தவர் என்றும், மேடை பேச்சாளர் கிளை செயலாளர் என தகுதி இருந்தும் மதிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

ஆனால் புதிய தமிழகம் கட்சியில் இருந்து வந்த ஜெயகுமார் ஒன்றிய செயலாளராக ஆகிவிட்டதாகவும், தமிழ்நாட்டிலேயே பைக்கில் செல்லும் ஒன்றிய குழு தலைவர் நானாகத் தான் இருப்பேன் என்றும், என்னுடைய ஒன்றியம், எனது வார்டில் நடைபெறுகிற பொதுக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பும் இல்லை, பெயர் போடவும் இல்லை என்று அந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இதனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றும், கட்சியின் பொதுக்கூட்ட மேடையிலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து நானும், எனது கணவரும் தீயிட்டு கொளுத்தி கொள்கின்றோம், என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதி பெண்ணுரிமை என்று வரிந்து கட்டி பேசிவரும் திமுக தலைவரால் இந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் பிரச்சினையை கூட தீர்த்து வைக்க முடியவில்லை என்று எதிர்கட்சியினர் கடுகடுத்து வருகின்றனர்.

  • Vishal health concerns viral video விஷாலுக்கு FIRST என்ன பிரச்சனைன்னு தெரியுமா…ரசிகர் மன்றம் வெளியிட்ட திடீர் அறிக்கை…!
  • Views: - 422

    0

    0