‘சீட்’ கொடுக்காததால் ஆத்திரம் : திமுக மாவட்ட செயலாளர் மீது சொந்தக் கட்சியினரே தாக்குதல்.. கார் கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan31 January 2022, 6:51 pm
தென்காசி : வரும் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என கூறி திமுக மாவட்ட செயலாளர் மீது திமுகவினரே தாக்குதல் நடத்திய காட்சிகள் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர்.
ஒரு பக்கம் கூட்டணி தொகுதிப் பங்கீடும், மறுப்பக்கம் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். வேட்பு மனு தாக்கலும் சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் வேறொரு கூட்டத்துக்கு புறப்பட்டு சென்றார். அந்த கூட்டத்தில் இருந்த சங்கரன்கோவில் பகுதி திமுகவினர் உட்கட்சி பூசல் காரணமாக தங்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற புகாரை முன் வைத்தனர். இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் கூட்டத்தை விட்டு உடனே மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் காரில் புறப்பட்டு சென்றார். இருப்பினும் திமுகவினர் அவரை துரத்தி சென்றனர். அவர் கடையில் தேநீர் அருந்தி கொண்டிருந்த போது, அவரது காரை திமுகவினர் கல்வீசி தாக்கினர்.
பின்னர் மாவட்ட செயலாளரை தாக்க முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சொந்த கட்சியினரே மாவட்ட செயலாளரை தாக்கியது தலைகுனிய செய்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது, மாவட்ட செயலாளர்களின் பொறுப்பு என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், மாவட்ட செயலாளரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.