பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்த திமுக பிரமுகர்… கூடவே அண்ணாமலை : கிளம்பிய பஞ்சாயத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2023, 8:13 pm

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக கிளைச் செயலாளரான சிவக்குமார் என்பவர் தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இவர் வைத்துள்ள பேனர் தான் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்திருப்பதோடு பேசு பொருளாகவும் மாறியுள்ளது. நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தமைக்காக பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கோடான கோடி நன்றிகள் எனக் கூறியிருக்கிறார்.

பிரதமர் என்ற அடிப்படையில் மோடிக்கு நன்றி கூறி திமுக நிர்வாகி பேனர் வைத்ததில் தவறில்லை. ஆனால் அதே பேனரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படத்தையும் திமுக கிளைக்கழகச் செயலாளர் சிவக்குமார் போட்டிருந்தது தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

ஒரு பக்கம் ஆ.ராசா, அமைச்சர் சிவசங்கர் படங்களும் அந்த பேனரில் இடம்பெற்றுள்ளன. கொள்கை ரீதியாக எதிரெதிர் துருவங்களாக உள்ளவர்களை ஒரே பேனரில் போட்டு ஒரே நாளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் திமுக நிர்வாகி.

இதனிடையே அண்மையில் தான் விளம்பர பேனர்கள், பதாகைகள், போஸ்டர்களை திமுகவினர் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவுறுத்தியிருந்தார்.

அதுமட்டுமல்ல கட்சி கட்டுப்பாட்டை மீறி இனி பேனர்களோ, போஸ்டர்களோ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சர்ச்சைக்குரிய விளம்பர பேனர் மேலும் புகைச்சலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த பேனர் படத்தை பாஜகவினர் அதிகளவில் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!