அனுமதியின்றி மரங்களை வெட்டிய திமுக பிரமுகர்.. கேள்வி கேட்ட சமூக ஆர்வலர் மற்றும் அதிகாரிகளை மிரட்டிய சம்பவம்.. வைரலாகும் ஆடியோ!!
Author: Babu Lakshmanan29 November 2022, 3:37 pm
கோவை ; அனுமதியின்றி மரங்களை வெட்டிவிட்டு அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் திமுகவினரின் ஆடியோ வைரலாகி வருகிறது.
கோவை கவுண்டம்பாளையம் பி & டி காலனி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த தூங்கு வாகை மரம். பொது மக்கள் யாருக்கும் இடையூறு இல்லாமல் இருந்தது. இந்த மரத்தை அருகில் உள்ளவர்கள், கட்டிட பணிக்கு இடையூறாக இருப்பதால் முறையான அனுமதி பெறாமல் வெட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூழல் ஆர்வலர் சையது அங்கு சென்று அதை உடனடியாக வெட்டுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் தி.மு.க பிரமுகரிடம் அனுமதி பெற்றதாக கூறினர். அதனால் தி.மு.க வைச் சேர்ந்த தேவராஜ் என்பவரை செல்போனில் தொடர்பு கொண்டு அனுமதி பெறப்பட்டதா..? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு சூழல் ஆர்வலரிடம் தான் கிராம நிர்வாக அலுவலரிடம் அனுமதி பெற்று தான் வெட்டுவதாக கூறினார். இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அதிகாரி லோகநாயகியிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கேள்வி கேட்ட போது, ‘தான் அனுமதி அளிக்கவில்லை,’ எனக் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சூழல் ஆர்வலர் சையத், மேலும் இது குறித்து தி.மு.க பிரமுகர் தேவராஜிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மிரட்டும் தோனியில் நீ யார்..? கேள்வி கேட்பதற்கு என்று கேட்டுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் சையது கூறும் போது:- இதுபோன்று கட்சிப் பெயர்களை பயன்படுத்தி கோவையில் தொடர் அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும், மேலும் இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.