உடை மாற்றும் போது செவிலியரை வீடியோ எடுத்த திமுக பிரமுகர்.. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2024, 6:51 pm
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் மெரிலா பேபி.
அதே பகுதியைச் சேர்ந்த ஆளும் திமுக கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் பாரதிராஜா என்பவர் மருத்துவமனையில் செவிலியர் உடைமாற்றும் போது ஆபாச வீடியோ எடுத்து அந்த பெண்மணியையும் அவரது கணவரையும் வீட்டில் சந்தித்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
மேலும் அவ்வாறு வெளியிட வேண்டாம் என்றால் எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கூறி மிரட்டியதாக புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடந்த 13 தினங்களுக்கு முன்னதாக புகார் மனு அளித்துள்ளனர்.
இதையும் படியுங்க: பிரியாணி கடையை முடித்துவிட்டு தினமும் ‘அங்கு’ சென்ற நபர்.. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்!
அரசு மருத்துவமனை செவிலியர் அளித்த புகார் மனு குறித்து விசாரிக்காமல் மெத்தன போக்கில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், குற்றவாளி என்று கூறப்படும் பாரதிராஜா திமுக பிரமுகர் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆளும் திமுக கட்சியின் பிரமுகர் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் பாதிக்கப்பட்ட செவிலியர் மன உளைச்சல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவர் தூக்க மாத்திரையை உட்கொண்டு தற்பொழுது அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறுகின்றனர்.
ஆவுடையார் கோவில் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக பாதிக்கப்பட்ட செவிலியரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இன்று அறந்தாங்கி- ஆவுடையார் கோவில் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு செவிலியரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபடக் கூடாது என்று கூறி வலுக்கட்டாயமாக கைது செய்து ஆவுடையார் கோவில் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதனால் ஆவுடையார் கோவில் பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது..