அரசு பெண் அதிகாரி மீது நாற்காலி வீச முயன்ற திமுக நிர்வாகி… அரசுக்கு வந்த எச்சரிக்கை : அடுத்த நிமிடமே கைது!
Author: Udayachandran RadhaKrishnan28 July 2024, 5:33 pm
சிவகங்கை அருகே உள்ள சித்தலூரைச் சேர்ந்தவர் முருகன். திமுக பிரமுகரான இவர், ஒப்பந்ததாரராக உள்ளார். பெருங்குடி ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட முருகன், பணி முடிந்துவிட்டதாகவும், பணத்தை விடுவிக்குமாறும், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரியிடம் நேற்று கேட்டுள்ளார்.
பணி அனுமதி உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வருமாறு உதவிப் பொறியாளர் கிருஷ்ணகுமாரி தெரிவித்ததால், முருகன் சத்தம் போட்டு பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முருகன், அங்கிருந்த இரும்பு சேரை எடுத்து, கிருஷ்ணகுமாரியைத் தாக்க முயன்றார். அலுவலக ஊழியர்கள் முருகனை தடுத்து வெளியே அழைத்து வந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காண்ட்ராக்டர், பெண் அதிகாரியை தாக்க முயன்றதைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள், தங்கள் பணியைப் புறக்கணித்து, ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பெண் அதிகாரியைத் தாக்க முயன்ற முருகனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இது தொடர்பாக சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் கிருஷ்ணகுமாரி புகார் கொடுத்தார்.
காண்ட்ராக்டர் முருகன் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநில நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து, அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவோம் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் எச்சரித்திருந்த நிலையில் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.