போலி ரசீது மூலம் கட்டணம் வசூலிக்கும் திமுக பிரமுகர் ; காந்தி மார்க்கெட்டில் மக்கள் ஜனநாயக கட்சியினர் முற்றுகை போராட்டம்!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 12:06 pm

திண்டுக்கல் ; அதிகாரிகள் துணையோடு திமுகவினர் காந்தி மார்க்கெட் வணிக வளாகத்தில் ரசீது தயார் செய்து அடாவடி வசூலில் ஈடுபடுவதாக கூறி மக்கள் ஜனநாயக கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டானது, பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை சந்தைப்படுத்தி உள்ளூர் வியாபாரிகள் விற்பனை செய்யும் மையமாக விளங்குகிறது. மேலும், பல விவசாயிகள் கத்திரிக்காய், முருங்கை, புடலங்காய், சௌசௌ, கேரட் உள்ளிட்ட காய்கறிகளை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய இடமாகவும் திகழ்ந்து வருகிறது.

கடந்த மூன்று வருடங்களாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு காந்தி மார்க்கெட் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் வந்த நிலையில், கடந்த 15 தினங்களாக மறு ஏலம் வைக்கப்படாத நிலையில், திமுகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் துணையோடு, தலைசுமைக்கு ரூபாய் ஐந்து வீதம், கனரக வாகனம் உள்ளிட்ட பெரும் சுமைக்கு 20 ரூபாய் என நாள்தோறும் வந்து செல்லும் விவசாயிகளிடம் போலியான ரசீது தயார் செய்து வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், அரசின் எந்தவித முத்திரையும், அதிகாரிகளின் கையெழுத்து இல்லாத ரசீதுகளை வைத்து அடாவடி வசூலில் ஈடுபட்டு வருவதாக கூறி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் போலி ரசீதை வைத்து வசூலில் ஈடுபட்ட நபரிடமிருந்து ரசீதை பிடுங்கி திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டம் நடத்தினர்.இதனால் மார்க்கெட் பகுதி பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும், அடாவடி வசூலில் ஈடுபடும் திமுகவினர் மீது காவல்துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதை போல் இப்பகுதியில் உள்ள அமைச்சர் கவனத்திற்கு இதனை எடுத்து இதுபோன்ற முறைகேடான வசூலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ