பேக்கரியை சூறையாடிய திமுகவினர் : குடித்த ‘டீ’க்கு காசு கேட்டதால் ரகளை… 2 ரூபாய்க்காக 2 பேரின் மண்டை உடைப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2022, 4:21 pm
விழுப்புரம் : இரண்டு ரூபாய்க்காக இரண்டு பேரின் முகங்களை உடைத்த திமுகவினரால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் பிரபல நிறுவனத்தின் டீக்கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு இரவு சிலர் சென்று டீ குடித்துள்ளனர். பின்னர் பணம் கொடுக்கும்போது ஒரு டீயின் விலை ரூ.12 என்று அங்கிருந்த கடை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பத்து ரூபாய் டீயை 12 ரூபாய்க்கு எப்படி விற்கலாம் என்று கேட்டு கடை ஊழியர்கள் 2 பேரிடமும் தகராறு செய்ததோடு அவர்களை தகாத வார்த்தையால் திட்டி காவல்துறையினரை கூப்பிட சொல்லி தாக்கியுள்ளனர்.
மேலும் கடையில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சூறையாடினர். இந்த தாக்குதலில் டீக்கடை ஊழியர்கள் 2 பேரும் காயமடைந்தனர். ஆனால் போலீசார் வர தாமதமானதால் தாக்கிய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
மேலும் தாக்கிய நபர்கள் ஆளும் திமுக கட்சியின் ஆதரவாளர்கள் என்பதும், அந்த மாவட்டதில் உள்ள முக்கிய அமைச்சரின் ஆதரவாளர் என்பதும் தெரியவந்துள்ளது.
பின்னர் விழுப்புரம் மேற்கு போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, தாக்குதலில் காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
2 ரூபாய்க்காக இரண்டுபேர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் ஆவின் டீக்கடையில் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் போல் நடைபெற்றிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.