திமுக பிரமுகர்கள் மிரட்டியதால் விவசாயி தூக்குபோட்டு தற்கொலை ; உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம்

Author: Babu Lakshmanan
27 December 2022, 8:34 am

வேலூர் ; விவசாய நிலத்தில் வழி விடாததால் திமுக பிரமுகர்கள் மிரட்டியதாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்த பெரிய போடிநத்தம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ் (50). இவருக்கு அருகே உள்ள கிருஷ்ணன் என்பவரின் விவசாய நிலத்திற்கு செல்ல நாகேஷ் நிலத்தில் வழி விடும்படி தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 03ம் தேதி நாகேஷிக்கு சொந்தமான இடத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை கிருஷ்ணன் தரப்பினர் சேதப்படுத்தியதாகவும், இது தொடர்பாக நாகேஷ் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், மாறாக நாகேஷ் மற்றும் மனைவியையும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

மேலும், திமுகவை சேர்ந்த காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், பெருமாள்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் நாகேஷை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நாகேஷ், நேற்று விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து திமுக பிரமுகர்கள் மிரட்டியதன் காரணமாகவே நாகேஷ் உயிரிழந்ததாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உறவினர்கள் மற்றும் பாமக கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல வந்த காவல்துறையினரை தடுத்து நிறுத்தி, உடலை வழங்க மறுத்ததுடன், நாகேஷ் தற்கொலைக்கு காரணமான திமுக பிரமுகர்களை கைது செய்யக்கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பெரிய போடி நத்தம் கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் தற்போதைக்கு (174) சந்தேக மரணத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், விசாரணைக்கு பிறகு உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, உறவினர்கள் உடலை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து விவசாயி நாகேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக மேல்பாடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒன்றிய குழு பெருந்தலைவராக உள்ள திமுக பிரமுகர் மற்றும் திமுக கட்சியினரால் விவசாயி மிரட்டப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 807

    0

    0