அமைச்சர்களை வரவேற்க வைத்திருந்த திமுக கொடி சாய்ந்து விபத்து : நிலைதடுமாறி விழுந்த வாகன ஓட்டி படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2022, 6:13 pm

திண்டுக்கல் : கூட்டுறவுத் துறை அமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த திமுக கொடியால் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மைய கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர் .

இரண்டு அமைச்சர்களையும் வரவேற்பதற்காக திமுகவினர் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன்களில் திமுக கட்சி கொடியை வைத்திருந்தனர்.

இதற்கிடையே பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த அன்வர் என்பவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திமுக கொடி சாய்ந்ததில் அன்வர் வாகனத்தில் மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அன்வரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அரசு நிகழ்ச்சிக்காக அமைச்சர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த திமுக கொடியால் விபத்து ஏற்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • அவரை மாதிரி தான் நான் இருப்பேன்…பிரபல வில்லன் நடிகரை ரோல் மாடலாக சொன்ன சமுத்திரக்கனி..!