திமுக அரசின் மிகப்பெரிய சாதனை… முதலமைச்சருக்கு என்னுடை நன்றி ; கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
15 July 2024, 2:03 pm

அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி இன்று (15/07/2024) தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள வி.வி.டி நினைவு தொடக்கப் தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். பின்னர்,மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தபடியே அமர்ந்து காலை உணவை உட்கொண்டார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் திருஉருவப்படத்திற்கு கனிமொழி கருணாநிதி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் பேசிய கனிமொழி எம்:பி: கலைஞர் கருணாநிதி அவர்கள் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக சட்டத்தை இயற்றி, எந்த நாளை அறிவித்தாரோ. அதேநாளில் நம்முடைய முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறக்கூடிய பள்ளியில் விரிவாக்கி இருக்கிறார்.

முதலமைச்சர் பேசும்போது நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், அந்த மகிழ்ச்சிக்கு வாய்ப்பு அளித்த மக்களை அத்தனை பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இந்த காலை உணவுத் திட்டம் என்பது உண்மையாகவே, திமுக அரசின் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்க வேண்டும்.

நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில், காலை உணவுத் திட்டத்தின் வழியாக 46 ஆயிரத்து 18 மாணவ மாணவிகள் பயன் பெறுகிறார்கள். காலை உணவு என்பது பிள்ளைகளுக்கு மிக முக்கியமான, பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடிய பருவத்தில் மிக முக்கியமான ஒன்று. காலையில் சாப்பிடாமல் பள்ளியில் வரக்கூடிய பிள்ளைகள் வகுப்பறையில் கவனம் செலுத்த முடியாது. மாணவர்கள் மிகவும் சோர்வோடு அங்கே அமர்ந்திருப்பார்கள், அவர்களுக்கு சோர்வின் காரணமாகப் பாடத்தைக் கவனிக்காமல் ஆசிரியருக்கும் அது ஒரு சவாலாக மாறி, இருவருக்கும் இடையே போராட்டமாக மாறக்கூடிய நிகழ்வு கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்தியாவில் UNICEF கணக்கெடுப்பை எடுத்துக் கொண்டால், மிகக் குறைவாக வளர்ச்சி இருக்கக் கூடிய குழந்தைகள் உணவு கிடைக்காத காரணத்தால் 38 சதவீதம் இந்தியாவில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.

மேலும், இந்திய அரசு கணக்கெடுப்பு ஆய்வுகளின்படி கூட தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் உணவு பற்றாக்குறை, உணவு கிடைக்காமல் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் 3,000 குழந்தைகள் உயிரிழந்து கொண்டியிருக்கிறார்கள் என்ற வருத்தமான செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நம்முடைய பிள்ளைகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நம்முடைய முதலமைச்சர் எதிர்கால தலைமுறை ஆரோக்கியமானதாக, மகிழ்ச்சியோடு கல்வி பயிலக்கூடிய ஒரு தலைமுறையாக உருவாக வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட திட்டம்.

இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்த முதலமைச்சருக்கு என்னுடைய நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பேசினார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் ரா.சரவண குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாவது முதல் ஐந்தாவது வரை படிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் அன்று காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1,14,000 மாணவர்கள் பயன்பெற்றனர். இந்தநிலையில், 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் இத்திட்டம் கூடுதல் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30,992 அரசு பள்ளிகளில் படிக்கும் 18,50,000 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர். இதனை தொடர்ந்து அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!