ஏற்றம் அளிப்பதாக கூறி ஏமாற்றத்தை மட்டுமே தருகிறது திமுக அரசு : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2022, 3:54 pm
ஏற்றம் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு ஏமாற்றங்களை மட்டுமே மக்களுக்கு தருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பாக மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் , மாதாந்திர மின்கட்டண உயர்வை அமல்படுத்த வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய ஜி.கே.வாசன் , மின் கட்டண உயர்வு , சொத்து வரி உயர்வால் தமிழகத்தில் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் , மக்கள் மட்டும் அல்லாமல் திருப்பூர் போன்ற தொழில்நகரங்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.
பெண்கள் இரவில் மட்டும் அல்லாமல் பகல் நேரங்களில் கூட நடமாட முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் , பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தந்து திமுக ஆட்சிக்கு வந்தது , ஆனால் எந்த நல்ல திட்டத்தையும் அமல்படுத்தாமல் மின் கட்டண உயர்வு , சொத்து வரி உயர்வு போன்ற அறிவிக்கப்படாத திட்டங்களை அமல்படுத்தி மக்களுக்கு கடுமையான சிரமத்தை கொடுப்பதாக விமர்சித்தார்.