திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!
Author: Udayachandran RadhaKrishnan15 April 2025, 6:59 pm
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச் சட்ட விளக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரையில் உள்ள பாஜக பிரமுகர் வீட்டில் தங்கி இருந்தார். பிற்பகல் திண்டுக்கல் செல்ல இருந்த நிலையில் அவரை காவல்துறையினர் தடுத்து மண்மேடு பகுதியில் உள்ள கட்சிகாரரின் வீட்டிலிருந்து செல்ல முடியாமல் தடுத்து வைத்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் மாரிசக்கரவர்த்தி தலைமையிலான பாஜகவினர் வேலூரின் இப்ராஹிம் வைக்கப்பட்டிருக்க வீட்டில் குவிந்து காவல்துறையினர் அத்துமீறலை கண்டித்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம் பேசுகையில், “திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இன்று பாஜக சார்பில் வக்பு திருத்தச் சட்டம் மாநாட்டுக்கு பேச செல்ல இருந்தேன். ஆனால், மாநகர் போலீஸ் கமிஷனர் ஆணைப்படி அதிக போலீசாரை குவித்து என்னை தடுத்து வைத்துள்ளார். மதுரை கமிஷனருக்கு உயர் அதிகாரிகள் சொல்லி இருப்பதாக தகவல் கிடைக்கிறது. என்னை வக்பு திருத்தச் சட்டம் குறித்து பேச அனுமதிக்க முடியாது என்கிறார்கள்.
தமிழ்நாடு முதல்வரை தளபதி ஸ்டாலின் என்பார்கள். ஆனால் அதற்கு அர்த்தமில்லாமல் போயிட்டது என்னை பேசவிடாமல் தடுக்கிறார்கள். எஸ்.டி.பி.ஐ கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பங்கேற்கிறார்கள் அதில் பங்கேற்று பல்வேறு முரணான கருத்துக்களை எடுத்து வைத்து கலவரத்தை தூண்டும் விதமாக பேசிகிறார்கள்.
நாங்கள் நாடாளுமன்றத்தில் வக்பு திருத்தச் சட்டம் குறித்து அமைச்சர் பேசிய விசயத்தை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லக் கூடாதா? காவல்துறை ஆளும் கட்சியின் ஏவல்த்துறையாக மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் என்னை தடுக்கும் போது உங்கள் உயிருக்கு ஆபத்து என்கிறார்கள் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றா நீங்கள் விடுங்கள் எங்கள் இந்து உறவுகள் எங்களை பாதுகாப்பார்கள்.

திமுக அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து வக்பு திருத்தச் சட்டத்தை எதிராக தொடர்ந்து கலவரத்தை தூண்டும் விதமாக, ஆ.ராசா, கனிமொழி, திருமாவளவன், ஜவஹரூல்லா உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள். இதை காவல்துறை தடுக்கவில்லை, அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு அனுமதி கொடுக்கிறார்கள்,
ஆனால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆதரவாக பாஜகவிலிருந்து ஒரு இஸ்லாமியராக இது குறித்து இந்து, இஸ்லாமிய மக்களிடம் விளக்க சென்றால், எங்கள் மீது சாப்பிட விடாமல் கடுமைகாட்டுகிறீர்கள்.
மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்தை எற்க மாட்டோம் என மம்தா பேனர்ஜி அறிவித்தார். அங்கு நடைபெற்ற கலவரத்தில் காவல்துறை வாகனம், பொது சொத்துக்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் 148 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் தூண்டிதலின் பேரில் கலவரத்தில் இறங்கினார்கள்.

அதேபோல் அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் திமுக அரசு கலவரத்தை தூண்டி உயிர் பலி கொடுக்க தயாராகி வருகிறது., பலிதானம் கொடுத்துத்தான் பாஜகவை வளர்த்தோம், இன்னமும் கொடுக்க தயாராக இருக்கிறோம்,
வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குப்பைக்குச் செல்லும் எனத் தெரிந்தும் சட்டமன்றத்தில் திமுகவால் கொண்டு வரப்பட்டுள்ளது. வக்பு சொத்தில் அறிவாலயம், கட்டுவீர்களா? இதை கேட்கக் கூடாதா?,
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், பாஜக நிர்வாகி வக்பு சொத்தை அபகரித்து வைத்துள்ளார்கள் என நிரூபியுங்கள், பார்க்கலாம், திமுக அமைச்சர் அதன் கைக் கூலிகள் வக்பு சொத்தை அபகரித்து வைத்துள்ளார்கள் அதனை மீட்க வேண்டாமா? எனப் பேசினார்.
