மாறி மாறி அடித்துக் கொண்ட திமுக கவுன்சிலர்கள்.. கலவர பூமியான நகராட்சி அலுவலகம்; தலைவரின் பேச்சை காற்றில் பறக்க விட்ட கட்சியினர்…!!
Author: Babu Lakshmanan11 October 2022, 2:18 pm
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் திமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக திமுக கவுன்சிலரின் ஆதரவாளர்கள் திமுக கவுன்சிலரையே கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திமுகவில் தற்போது உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக போட்டியிட ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வேட்பு மனு செய்தார். இவருக்கு போட்டியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முக்கப்பன் என்பவர் வேட்புமனு செய்தார்.
மூக்கப்பன் என்பவர் வேட்புமனு செய்ய கள்ளக்குறிச்சி முன்னாள் நகர திமுக செயலாளர் கென்னடி என்பவர் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட கள்ளக்குறிச்சி நகராட்சி 17வது வார்டு கவுன்சிலர் ஞானவேல் என்பவர், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு ஆதரவாக செயல்பட்டு, கள்ளக்குறிச்சி முன்னாள் திமுக நகர செயலாளர் கென்னடி குடும்பப் பெண்களை சமூக வலைதளங்களில் விமர்சித்தார் என்று கூறப்படுகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே புகைச்சல் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த நகர மன்ற கூட்டத்தில் பங்கேற்க 17ஆவது வார்டு கவுன்சிலர் ஞானவேலுவும், திமுக நபர் கென்னடியின் சகோதரர் மனைவி, ஐந்தாவது வார்டு கவுன்சிலர் யுவராணிராஜாவும் நகர மன்ற கூட்டத்தில் பங்கேற்றார்.
வெகு நேரம் நடைபெற்ற இந்த நகர மன்ற கூட்டத்திற்கு பின்பு கவுன்சிலர்கள் அனைவரும் வெளியே வரும்போது, கென்னடியின் குடும்ப கவுன்சிலர் யுவராணிராஜா என்பவர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்த 17வது வார்டு கவுன்சிலர் ஞானவேலுவை பார்த்து, “நீ எல்லாம் எப்ப கட்சிக்கு வந்த, எங்கள் குடும்பத்தை நீ விமர்சனம் பண்ணுவியா”, என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, திமுக கவுன்சிலர் யுவராணி ராஜாவின் ஆதரவாளர்கள் 17வது வார்டு கவுன்சிலர் ஞானவேலுவை நகரமன்ற அலுவலகத்திலேயே கடுமையாக தாக்கினார்கள். இதனால் 17வது வார்டு நகர மன்ற கவுன்சிலர் ஞானவேல் பயத்தில் அலறி துடித்த நிலையில், அப்போது அங்கிருந்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்களை விலக்கிவிட்டு கலைந்து போக செய்தனர்.
இத்தனை சம்பவங்களும் கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர் சுப்புராயிலு முன்னிலையிலே நடைபெற்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பானதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். காவல் நிலைய ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் உதவி ஆய்வாளர் சத்தியசீலன் ஆகியோர் வந்து கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கனவே, திமுகவினர் விமர்சனங்களுக்கு ஆளாகக் கூடாது என்றும், மத்தளத்திற்கு இருபக்கம் அடிவிழுவது போல் தனது நிலை இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை தெரிவித்த மறு நாளே, திமுக உட் கட்சி விவகாரம் தொடர்பாக இரண்டு திமுக கவுன்சிலர்களை சேர்ந்த தரப்பினர் நகராட்சி அலுவலகத்திலேயே தாக்கி கொண்ட சம்பவம் பொதுமக்களை முனுமுனுக்கச் செய்துள்ளது.
0
0