‘இதுக்கு கம்யூனிஸ்ட் லாக்கி இல்ல‘ : தலைமையை மீறி சுயேட்சையாக களமிறங்கிய திமுக பிரமுகர் : கூட்டணியில் சலசலப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan2 February 2022, 2:31 pm
தென்காசி : கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் திமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் திமுகவினரை கதிகலங்க செய்துள்ளது.
வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக பல இடங்களில் மாவட்ட செயலாளர்கள் மீது திமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். பல இடங்களில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சங்கரன்கோவிலில் உள்ள மொத்தம் 30 வார்டுகளில் நகராட்சியை கைப்பற்ற திமுக – அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் 8வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் 8வது வார்டு தனக்குதான் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த திமுக பிரமுகர் சரவணக்குமா, கடந்த தீபாவளி பண்டிகையில் இருந்தே வீடு வீடாக இனிப்புகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் 8வது வார்டை கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்டுக்கு திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் ஒதுக்கியுள்ளார். இதனால் திமுக பிரமுகர் சரவணக்குமார் கடும் கோபத்தில் இருந்துள்ளார். வார்டை விட்டு கொடுக்குமாறும், அடுத்தடுத்து கூட்டுறவு சங்கங்களில் பொறுப்புகள் தரப்படும் என பேச்சுவார்த்தை நடத்தியும் சரவணக்குமார் சமாதானம் ஆகவில்லை.
இதற்கு காரணம், 8 வது வார்டில் சரவணக்குமாரின் தந்தை 20 ஆண்டுகள் கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதால் அவரை தொடர்ந்து களப்பணியாற்ற விரும்பியுள்ளார். இந்த செண்டிமெண்டை வைத்து தான் வென்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் ஆனது ஆகட்டும் என கருதி சரவணக்குமார் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். வேட்பு மனுவை தாக்கல் செய்து வீடு வீடாக பிரச்சாத்தை துவக்கியுள்ளார். இவருக்கு அந்த பகுதியல் மவுசு அதிகம் என்பதால் திமுகவினரும், தோழமை கட்சியினரும் கலக்கத்தில் உள்ளனர்.