‘ ஆண்ட பரம்பரை..’ அமைச்சர் பி.மூர்த்தி சர்ச்சை பேச்சு.. கொதிக்கும் அமைப்புகள்!
Author: Hariharasudhan2 January 2025, 12:20 pm
நாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என, அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாக வெளியான வீடியோ அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஒரு குறிப்பிட்ட சமூக அமைப்பு நடத்தும் அரசு வேலை வாய்பு பயிற்சி மைய விழாவில், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டு பேசியதாகச் சொல்லப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் பேசியுள்ள அமைச்சர் பி.மூர்த்தி, “நான் சொல்கிறேன், நாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பல வரலாறுகள் மறைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை நீங்கள் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். படித்திருக்கிறீர்களா, இப்போது 4 பேர், 2 பேர் செத்துப்போனால்கூட பெருசா இது பண்றான்.
ஆனால், சுதந்திரத்திற்காக இந்தச் சமுதாயத்தில் 5 ஆயிரம், பத்தாயிரம் பேர் செத்திருக்காங்கிறதை நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்க்க வேண்டும். அந்த வரலாற்றையெல்லாம் இந்த நாட்டிற்கு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன். ஏன்னு சொன்னீங்கன்னா, அதுக்கு ஒரு வரலாறு இருக்கு.
அது அழகர் கோயிலாக இருந்தாலும், திருமோகூர் கோயிலாக இருந்தாலும், ஆங்கிலேயர்களின் படையெடுப்பில் கொள்ளையடித்துச் செல்லும்போது இந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான் முன்னுக்கு நின்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வரலாறு இன்றைக்கு மறைக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கைதி மர்ம மரணம்? வேலூர் ஆண்கள் சிறையில் ஷாக் சம்பவம் : நேரில் நீதிபதி விசாரணை!
இதேபோன்றுதான், உசிலம்பட்டி பக்கத்தில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்றால், விவசாயத் துறையில், தொழில் துறையில் நம்மவர்கள் அன்று முன்னுக்கு இருந்த நிலையிலும்கூட, படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே, நமது வரலாற்றை வெளிக்கொண்டு வரமுடியாத சூழ்நிலை இருந்துள்ளது.
ஆனால், இப்போது தான் அரசு வேலை வாய்ப்புகளில் படிப்படியாக நீங்கள் வந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது மனதார பாராட்டுகிறேன்” என்று பேசியுள்ளார். சமூக நீதி அரசியலை முன்னெடுத்து வரும் திமுகவின் அமைச்சர் இவ்வாறு பேசுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.