சாமானியன் என்றால் பாயும் சட்டம்.. சட்டமன்ற உறுப்பினரென்றால் ஏனோ தயக்கம்? நீதிமன்ற உத்தரவை மீறும் திமுக எம்எல்ஏ : சல்யூட் அடிக்கும் காவல்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2022, 2:35 pm
உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்கத லால்குடி சட்ட மன்ற உறுப்பினர் மீது சட்டரீதியாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சாமானியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நான்கு சக்கர வாகனங்களுக்கு முன்பாக பம்பர் வைக்க கூடாது என்பது நீதிமன்றத்தின் உத்தரவு. பம்பர் வைத்திருந்தால் உடனே வாகனத்தை நிறுத்தி அதற்குண்டான நடவடிக்கையை காவல்துறையினர் துரிதமாக ஈடுபடுவர்.
ஆனால், திருச்சியில் வலம் வரும் ஒரு வாகனத்தின் பம்பர் மட்டும் ஏனோ, மாவட்ட காவல் துறையினர் கண்ணுக்கு புலப்படாதது ஆச்சர்யமே. இதற்கு காரணம் அந்த வாகனத்துக்கு சொந்தக்காரர் திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற திமுக உறுப்பினர் சௌந்தர பாண்டியன்.
எம்எல்ஏ பதவியில் இருக்கும் அவர் தான் நீதிமன்ற உத்தரவுகளை கடைபிடித்து பொது மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் 4வது முறை எம்எல்ஏவாக உள்ள சௌந்தரபாண்டியனோ கோர்ட் என்னை என்ன செய்து விட முடியும் என்று கேட்கும் ரீதியாக , பம்பரை மாட்டிக் கொண்டு, அரசு விழா, அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருச்சி முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
காரில் அமர்ந்து செல்லும் எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு சல்யூட் அடிக்கும் போலீசாரின் கண்ணில் ஏனோ இந்த பம்பர் தெரிய மறுக்கிறது. இதனால் கார் மீது நடவடிக்கை ஏதும் இதுவரை இல்லை.
சாமானியன் என்றால் பாயும் சட்டம், சட்டமன்ற உறுப்பினர் என்றால் தயங்கி நிற்பது ஏன்? என பொதுமக்கள் கேட்கும் கேள்வி போலீசார் காதுகளுக்கு இன்னும் எட்டவில்லையோ என்று தான் நினைக்கதோன்றுகிறது.