உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்த நாளையொட்டி திமுகவினர் நடத்திய குதிரைப் பந்தயம் ; சாலையில் சீறிப்பாய்ந்த குதிரைகள்..!!

Author: Babu Lakshmanan
26 November 2022, 5:54 pm

கரூர் ; கரூர் அருகே வாங்கல் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற குதிரைப் பந்தயத்தில் சாலையில் சீறிப்பாய்ந்த குதிரைகளால் பார்வையாளர்கள் பரவசமடைந்தனர்.

கரூர் மாவட்ட திமுக கிழக்கு ஒன்றியம் குப்புச்சிபாளையம் ஊராட்சி சார்பில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு குதிரை பந்தயம் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற குதிரை பந்தயத்தில் சிறிய குதிரை, நடு குதிரை, பெரிய குதிரை என மூன்று போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து குதிரை வண்டி உரிமையாளர்கள் தங்களது சாரதிகள், குதிரைகளுடன் போட்டியில் பங்கேற்றனர். வாங்கலில் இருந்து பஞ்சமாதேவி வரை சென்று மீண்டும் வாங்கல் வரும் வகையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் போட்டியின் பந்தய இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

போட்டி துவக்கியவுடன் வெற்றி பெறும் முனைப்புடன் சாரதிகள் தங்களது குதிரைகளின் வாலை முறுக்கி வேகமாக செல்ல முடுக்கி விட்டனர். இதனால், சாலையில் குதிரைகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்தது.

சாலையின் இரு மருங்கிலும் நின்று கண்டு களித்த பார்வையாளர்கள், பொதுமக்கள் இந்த காட்சிகளை பார்த்து பரவசமடைந்தனர். பின்னர், ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற குதிரைகளுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

சிறப்பாக இயக்கிய குதிரைகளின் சாரதிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி விழா கமிட்டியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!