அடிப்படை நாகரிகம் தாண்டி கருத்து சொல்லக்கூடாது… அண்ணாமலைக்கு திமுக எம்பி கனிமொழி மறைமுக அட்வைஸ்!
Author: Babu Lakshmanan20 January 2024, 3:58 pm
தூத்துக்குடியில் மீண்டும் போட்டியா? என்ற கேள்விக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முடிவைப் பொறுத்தது என்று கனிமொழி கருணாநிதியின் சூசகமாக பதில் அளித்துள்ளார்.
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்குப் பாராட்டு விழா இன்று தூத்துக்குடியில் உள்ள மாணிக்கம் மஹாலில் நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை தாங்கி, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுப்பட்ட 850 மீனவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகுப்பு வழங்கி வாழ்த்தினர்.
பாராட்டு விழா முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது :- கருத்தை யார் வேண்டுமென்றால் தெரிவிக்கலாம் தவறு இல்லை. அது எவ்வளவு காட்டமான கருத்தாக இருந்தாலும் முன்வைக்கலாம். அது அரசியலில் ஒரு சாதாரண விஷயம். அது எப்படிச் சொல்கிறோம் என்பதை நாம் கருத்தினை கொள்ள வேண்டும்.
அடிப்படை நாகரிகம் தாண்டி செல்லக்கூடாது என்பதைத்தான் நான் நினைக்கிறேன். மேலும், டெல்லியில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். திமுக தலைவர் என்ன முடிவு எடுக்கிறோரோ, அதைப் பொறுத்து தான் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தெரியும், எனக் கூறினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மீன்பிடி துறைமுகம் மேலாண்மை பிரிவு உதவி இயக்குநர் தி.விஜயராகவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கு.அ.புஷ்ரா ஷப்னம், தூத்துக்குடி மறைமாவட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு பென்சிகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.