தமிழ்நாடு இன்னொரு மணிப்பூராக மாறிவிடக்கூடாது… தூத்துக்குடி பிரச்சாரத்தின் போது திமுக வேட்பாளர் கனிமொழி பேச்சு..!!!

Author: Babu Lakshmanan
25 March 2024, 9:36 am

தமிழ்நாடு இன்னொரு மணிப்பூராக மாறிவிடக்கூடாது- தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளராக முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளும், தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலினின் சகோதரியுமான கனிமொழி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் வாயிலில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவர், திரேஸ்புரம், அமெரிக்கன் மருத்துவமனை பேருந்து நிறுத்தம், பூபால்ராயபுரம், மட்டகடை, அதனை தொடர்ந்து, சிவன் கோவில் அருகே உள்ள தேரடி பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்தார்.

அப்போது, தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி பேசியதாவது :- தமிழ்நாடு முதல்வர் மக்களுக்கான திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார். ஆனால், சிலர் நாங்கள் தான் பெரும்பான்மை மக்களுக்கு பணியாற்றுகிறோம் என்று அதில் அரசியல் சேர்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே இந்த சமூகத்தில் அடித்தட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு இந்த சமூகத்திலே யார் யாரெல்லாம் ஒடுக்கப்பட்டிருக்கிறார்களோ, யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு இல்லையோ, யார் யாருக்கெல்லாம் இந்த சமூகம் ஒரு நியாயத்தை வழங்கவில்லையோ, அவர்களுக்கு தொடர்ந்து பணியாற்றக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.

வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்திருப்பது திராவிட முன்னேற்ற கழகம். தமிழ்நாட்டில் இன்றைக்கு வேலை வாய்ப்பு, கல்வி அதுமட்டுமில்லாமல் ஒன்றிய அரசாங்கம் இன்னும் 30 வருடம் கழித்து தான் 50 சதவிகிதம் உயர் கல்வி பெறக்கூடிய ஒரு கனவோடு இருக்கிறார்கள்.

ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டில் அந்த சதவீதத்தை நாம் கடந்து விட்டோம். வட இந்திய மாநிலங்களில் இன்னும் மருத்துவமனைகளிலே பிரசவம் பார்க்கக்கூடிய முறை வரவில்லை. ஆனால் தமிழகத்திலே கிட்டத்தட்ட நூறு சதவீதம் பெண்கள் பிரசவத்திற்கு மருத்துவமனை போய் ஆரோக்கியமாக, பத்திரமாக தாயும், சேயும் நலமாக வீடு திரும்பக் கூடிய ஒரு நிலை இருக்கிறது.

தமிழ்நாடு இன்னொரு மணிப்பூராக மாறிவிடக்கூடாது என்பதை சகோதரர்கள் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.மேலும், சிதம்பர நகர், பிராயண்ட் நகர், 3ம் மைல், பழைய பேருந்து நிலையத்தை தொடர்ந்து இறுதியாக அண்ணா நகர் பகுதியில் பிரச்சாரம் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 329

    0

    0