ஆளுநரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களுக்கு இது நல்ல பாடம் : ஆளுநர் வெளிநடப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி பேச்சு!!
Author: Babu Lakshmanan10 January 2023, 11:19 am
சென்னை ; ஆளுநரை தூண்டிவிட்டு செயல்படுபவர்களுக்கு இது ஜனநாயக நாடு என்பதை ஆளுநரின் வெளியேற்றமே உணர்த்தும் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
திமுக மகளிர் அணி சார்பாக இராயபுரத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில், திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி பேசியதாவது:- சட்டமன்றத்தில் இருந்தோ, நாடாளுமன்றத்தில் இருந்தோ, எதிர்கட்சிகள் தான் வெளிநடப்பு செய்வார்கள். ஆனால், இன்று ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார் என்றால், அவர் எதிர்கட்சியாக செயல்படுகிறார் என்பதையே அவரின் வெளிநடப்பு உணர்த்துகிறது.
ஆளுநரை தூண்டிவிட்டு செயல்படுவர்கள், இது ஜனநாயக நாடு என இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணல் அம்பேத்கர், அண்ணா, பெரியார் போன்றோரை இழிவுபடுத்தும், மனதை புண்படுத்தும் நோக்கில் இவர்கள் தொடர்ந்து செயல்படுகிறார்கள். ஆளுநரின் வெளிநடப்பு என்பது அப்பட்டமான மரபு மீறல்.
பாஜக அரசு எழுதி கொடுக்கும் உரையை தான் குடியரசு தலைவர் படிக்கிறார். நாளை குடியரசு தலைவர் அதை படிக்காமல் தான் நினைத்ததை படிப்பேன் என்றால், மத்திய அரசு ஒத்துகொள்ளுமா..? ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவது ஜனநாயக விரோத செயல், எனக் கூறினார்.
பின்னர், அண்ணாமலையின் டிவிட்டர் பதிவு குறித்து கேட்ட கேள்விக்கு, “ஆட்சியில், பதவியில் இருப்பவர்கள் மக்களின் நலன்குறித்து பேசுவார்கள். அதனால் ஆளுநர் பதவியையே எதிர்கட்சிகளின் ஆர்பாட்டம் போல் மாற்ற நினைப்பது எந்த விதத்தில் நியாயம்,” என பதிலளித்தார்.