கோவை வந்தார் திமுக எம்பி ஆ. ராசா : எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய பாஜக மகளிர் அணியினர் குண்டுக்கட்டாக கைது!!
Author: Udayachandran RadhaKrishnan15 October 2022, 8:52 pm
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இன்று மாலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.பின் கோவையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் நீலகிரி செல்கிறார்.
இந்நிலையில் இந்து பெண்களை அவமதிக்கும் விதமாக நீலகிரி எம்.பி. ஆ. ராசா பேசியதாக கூறி அவருக்கு கருப்பு கொடி காட்ட பாஜகவினர் காளப்பட்டி நேரு நகர் பகுதியில் கூடினர்.
இதனை அடுத்து அந்த பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் பா.ஜ.க மகளிர் அணியினரும், அக்கட்சி தொண்டர்கள் என 50″க்கும் மேற்பட்டோர் நேரு நகர் பகுதியில் கருப்புக் கொடி காட்ட திரண்டதுடன் , ஆ.ராசாவிற்கு எதிராக கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க மகளிர் அணியினர் உட்பட 50″க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனிடையே துணை பொது செயலாளராக பொறுப்பேற்ற பின் கோவைக்கு வரும் ஆ.ராசாவை கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க திமுகவினரும், திராவிட இயக்கத்தினரும் வரவேற்க தி்ரண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.