செக் மோசடி வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் : சொந்த கட்சி நிர்வாகிக்கே கல்தா… விசாரணையில் பகீர்!!!
Author: Udayachandran RadhaKrishnan22 May 2023, 3:46 pm
திருப்பூர் மாவட்டம் – பல்லடம், பனப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம். தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.
இவருக்கும் தற்போது நகரச்செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு – செலவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அவசரத் தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சம் ராஜேந்திரகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் பணத்தை திருப்பி தராததால், அவரிடம் சண்முகம் கேட்டுள்ளார். அப்போதும் அவர் பணத்தை திருப்பி தராததால், இதுகுறித்து முக்கிய பிரமுகர்களிடம் பேசி கடந்த 2022-ல் ராஜேந்திரகுமார் ரூ.5 லட்சத்திற்கான காசோலை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அந்த காசோலை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதில் வரும் ஜூன் மாதம் 30-ந் தேதி நடக்கும் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று பல்லடம் திமுக நகர செயலாளர் ராஜேந்திரகுமார் பல்லடம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பல்லடத்தில் பீர் அதிக விலை விற்பதாக கூறி கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த ஆடியோ பதிவில் இவர் மீதும் புகார் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.