வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து பொதுமக்களை தாக்கிய திமுக பஞ்சாயத்து தலைவர் : திருப்பூரில் நடந்தது என்ன?
Author: Udayachandran RadhaKrishnan24 December 2023, 12:21 pm
வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து பொதுமக்களை தாக்கிய திமுக பஞ்சாயத்து தலைவர் : திருப்பூரில் நடந்தது என்ன?
திருப்பூர் மாவட்டம் மங்கலம் அடுத்த வேட்டுவபாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகாமையில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் சுடுகாட்டில் ஊற்று நீர் சுரப்பதாகவும் இதனால் சடலங்களை அடக்கம் செய்ய தோண்டும் குழியில் தண்ணீர் ஊற்று ஏற்படுவதாகவும் கழிவு நீரை வெளியேற்ற சாலை இடையே பாலம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் வடிகால் வசதி ஏற்படுத்த தரைப்பாலம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் அந்த பகுதியில் அமைந்துள்ள பரமசிவம் என்பவருக்கு சொந்தமான நூற்பாலை வழித்தடம் பாதிக்கும் என பாலத்தை மாற்றி அமைத்தாகவும் இதனால் கழிவு நீர் வெளியேறாமல் மீண்டும் சுடுகாட்டில் தண்ணீர் தேங்கும் என்பதால் உரிம முறையில் பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக வேட்டுவபாளையம் பஞ்சாயத்து தலைவர் மூர்த்தியிடம் (திமுக) பொதுமக்கள் கேட்ட போது அவர்களை திமுக பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி நூற்பாலையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களை கொண்டு தமிழர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மங்கலம் திருப்பூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
பொதுமக்களை பஞ்சாயத்து தலைவர் வடமாநில தொழிலாளர்களை வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமானோர் கூடி வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.