திமுக பெண் ஒன்றிய குழு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு… நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்கள்..!!

Author: Babu Lakshmanan
28 April 2022, 12:41 pm

திருச்சி – தொட்டியம் திமுக ஒன்றிய குழு தலைவர் மீது திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் ஊழல் குற்றச்சாட்டு கூறி. அவரை பதவியில் இருந்து நீக்குவதற்காக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த புனிதராணி என்பவர் ஒன்றிய குழு தலைவராக பதவி வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் ஒன்றியக்குழு துணைத் தலைவராக பதவி வைக்கிறார்.

இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 19 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி வகிக்கும் நிலையில், ஒன்றியக்குழு தலைவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதனால், ஒன்றியக்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெறாமல் இருந்தது. தொட்டியம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் முசிறி கோட்டாட்சியர் மாதவன் தலைமையில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. ஆணையர்கள் ஞானமணி, பெரியசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் புனித ராணியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக ஒன்றிய கவுன்சிலர்கள், தேமுதிக ஒன்றிய கவுன்சிலர, அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள், காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் உள்ளிட்ட 16 ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோட்டாட்சியரிடம் கேட்டதற்கு ஒன்றிய குழுத் தலைவருக்கு எதிராக உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் அரசின் வழிகாட்டுதல் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒன்றியக்குழு தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப் பட்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…