கோவையில் அராஜகம் செய்து வன்முறையை தூண்டி வெற்றி பெற நினைக்கிறது திமுக : விடுதலையான பின் எஸ்.பி.வேலுமணி பகீர் குற்றச்சாட்டு
Author: kavin kumar18 February 2022, 10:32 pm
கோவை: கோவையில் திமுக.,வினர் அராஜகம் செய்து வெற்றி பெற நினைக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் கரூரில் இருந்து ஆட்களை இறக்கி திமுக ரவுடித்தனம் செய்வதாகவும், எனவே கரூரில் இருந்து வந்தவர்களை உடனடியாக வெளியேற்றக்கோரியும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அங்கிருந்த போலீசார் எஸ்.பி.வேலுமணி உட்பட 9 எம்.எல்.ஏ.,க்களையும் கைது செய்து காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனிடையே இரவு 9.30 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒரு வாரமாக கரூர் மற்று சென்னையில் இருந்து ரவுடிகள் மற்றும் குண்டர்களை வைத்து மிக மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளனர். கோவை மக்கள் அமைதியான, மரியாதை கொடுக்க கூடிய மக்கள். சட்டமன்ற தேர்தலில் அதிமுக முழுமையாக வெற்றி பெற்றது. 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். அதனால் ரவுடி குண்டர்களை ஏவி அமைதியை குலைக்கும் வகையில் செயல்படுகின்றனர்.
ரவுடிகளால் பாதுகாப்பு இல்லாத சூழலில், கத்தி எடுத்து காட்டுபவர், கத்தியால் குத்துபவரை விட்டுவிட்டு புகார் கொடுப்பவர்கள் மீது வழக்கு போடுகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்றோம். அமைதியான முறையில் ஓரமாக அமர்ந்தோம். எங்களை கைது செய்து கூடுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தலில் அராஜகம் செய்து, வம்முறையை தூண்டி திமுக வெற்றி பெற நினைக்கிறது. 9 மாதங்களாக கோவையில் எந்த பணியும் நடைபெறவில்லை.
திமுக மீது அதிருப்தி உள்ள சூழலில், குண்டர்களை ஏவி அமைதியான ஊரை சீர்குலைக்கு முயற்சித்துள்ளனர். போது நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும். காவல்துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் திமுக வேட்பாளர்களுக்கு துணை போனால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதிமுக வெற்றி பெற்றாலும் மாற்றி திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாருக்கு வாக்களிக்கீறார்களோ ஜனநாயக முறைப்படி அறிவிக்க வேண்டும். இனி சரியாக நடக்க வேண்டும். இல்லையென்றால் ஜனநாயக முறைப்படி இந்த பிரச்சனையை கையில் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.