சாதகமாக காய் நகர்த்தி சதி செய்த திமுக.. மறு வாக்குப்பதிவு நடத்துங்க ; BJP வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2024, 6:21 pm

சாதகமாக காய் நகர்த்தி சதி செய்த திமுக.. மறு வாக்குப்பதிவு நடத்துங்க ; BJP வலியுறுத்தல்!!

தமிழக பா.ஜனதா சார்பில் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பாராளுமன்ற தேர்தலை நடத்துவது இந்திய தேர்தல் ஆணையம் என்றாலும், உண்மையிலேயே தேர்தலை நடத்துவது மாநில அரசு அதிகாரிகள் தான். ஏனெனில் தேர்தல் ஆணையத்திற்கு என்று தனியாக கட்டமைப்பு இல்லை. அது உயர் அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறு குழு மட்டுமே.

தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்த்தல், இறுதிப்பட்டியல் வெளியீடு, வேட்புமனு தாக்கல், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வாக்குப்பதிவு என தேர்தலை நடத்தி முடிப்பது தமிழக அரசு அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்களும் தான். மாவட்ட ஆட்சியர்கள் தான் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் முழுக்க முழுக்க தி.மு.க. வினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். கோவை உள்ளிட்ட தொகுதிகளில் தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு, தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர்களாக தி.மு.க. நியமித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் நியாயமான வெளிப்படையான நேர்மையான தேர்தல் நடைபெறவில்லை. வாக்குப்பதிவு சதவீதத்தை அறிவிப்பதில் நடைபெற்ற குளறுபடியில் இருந்தே இதை நன்கு உணர முடிகிறது.

தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் மூலம் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க கூடிய வட இந்தியர்கள் மற்றும் குறிப்பிட்ட சமுதாய மக்களின் வாக்குகளை கொத்துக்கொத்தாக வாக்காளர் பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நீலகிரி, முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடும் தென் சென்னை, பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் போட்டியிடும் திருப்பூர், பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் பால் கனகராஜ் போட்டியிடும் வடசென்னை, பா.ஜ.க. மாநிலச் செயலாளர் வினோஜ் செல்வம் போட்டியிடும் மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் தொகுதிக்கு தலா ஒரு லட்சம் வாக்குகள் வீதம் நீக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது.

தி.மு.க.வினரின் இந்த ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாக்குப்பதிவு நாளன்றே அம்பலப்படுத்தி உள்ளார்.

எங்கெல்லாம் கொத்துக்கொத்தாக கடைசி நேரத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்களோ, அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்த்து மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ