மாமூல், கட்டப்பஞ்சாயத்து… கணவரின் அராஜகத்தை கண்டுகொள்ளாத திமுக கவுன்சிலர்… கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்!!
Author: Babu Lakshmanan11 January 2024, 2:41 pm
கணவரின் அராஜகத்தை கண்டுகொள்ளாத திமுக பெண் கவுன்சிலரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 51வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா. இவருடைய கணவர் ஜெகதீசனும் திமுகவைச் சேர்ந்தவர். ஏற்கனவே, பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் நிர்வாகங்களில் தலையிடுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகளும், புகார்களும் வந்தனர். இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு, பெண் கவுன்சிலர்கள் தங்களுடைய பணிகளில் கணவரை அனுமதிக்ககூடாது என கண்டிப்பான உத்தரவை போட்டுள்ளார்.
இதையெல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் பல்வேறு கவுன்சிலர்களின் கணவர்கள் தொடர்ந்து நிர்வாகத்தில் தலையிட்டு வருகின்றனர். அப்படித்தான் திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசனும் செய்து வருகிறார். நான் தான் கவுன்சிலர் என்ற நினைப்பில் நடந்து கொள்ளும் அவர், வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பது, அதிகாரிகளை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்துக்களை செய்வது என தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அண்மையில் ரோந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகளும் சமூகவலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
சாலையோர வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் சிறைக்கு சென்று விட்டு வெளியே வந்த அவர், மாநகராட்சி 51வது வார்டு உதவி செயல் பொறியாளரை தாக்கி உள்ளார். இதையடுத்து, ஜெகதீசன் மீது அடுக்கடுக்கான புகார்கள் திமுக தலைமைக்கு சென்றது.
இந்நிலையில், தனது கணவரின் அராஜகப்போக்கை கண்டிக்காத பெண் கவுன்சிலர் நிரஞ்சனா மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 51-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்ததால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.