திமுகவைச் சேர்ந்த பட்டியலின சமூக பஞ்சாயத்து தலைவிக்கு சாதிக்கொடுமை… பணி செய்ய விடாமல் நெருக்கடி கொடுப்பதாக போலீஸில் பரபரப்பு புகார்..!!

Author: Babu Lakshmanan
24 September 2022, 12:38 pm

கரூரில் திமுகவைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவிக்கு சாதி ரீதியான பாகுபாடு அளித்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்னியூர் ஊராட்சியில் தலைவர், துணைத் தலைவர் உட்பட 10 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், திமுகவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என சம நிலையில் உள்ளனர். ஊராட்சி தலைவராக உள்ள சுதா பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்.

இந்த நிலையில், வாங்கல் காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ஊராட்சி மன்ற தலைவராக உள்ள தனது கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதி ரீதியாக பாகுபாடு செய்து வரும் 9வது வார்டு உறுப்பினர் நல்லுசாமி (அதிமுக) மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாம (திமுக) மற்றும் அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலர் நளினி மற்றும் அவருடைய கணவர் மூர்த்தி என்பவர் தேவையில்லாமல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் வந்து, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என்று கூறிக்கொண்டு ஊதியம் கேட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு கொடுத்துள்ளார்.

இந்த புகார் மனுவை ஏற்று நன்னியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் லீலாகுமார் (தணிக்கை) மற்றும் கரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி சுதாவை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி வாங்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் முன்னிலையில் விசாரணை செய்தனர்.

புகார் மனு மீது விசாரணை நடைபெற்ற வருவதாகவும், விசாரணையின் முடிவில் உண்மை தன்மை மற்றும் புகார் குறித்து விரிவாக தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!