யாரு சொன்னா கமல்ஹாசன் ஒரு நாத்திகவாதின்னு: அவரு நடிச்ச பக்தி படம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Author: Rajesh21 மார்ச் 2022, 5:16 மணி
நடிகர் கமல்ஹாசன் ஒரு நாத்திகவாதி என பலரும் அறிந்திருக்கும் நிலையில் அவர் நடித்த பக்தி படம் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
கடவுள் இல்லை என சொல்லும் நாத்திகராக நாம் அறிந்த கமல்ஹாசன், ஆத்திகத்தைப் பிரச்சாரம் செய்யும் பக்திப் படம் ஒன்றில் நடித்து, கடவுள் எனக்கும் வேண்டப்பட்டவர் தான் எனும் வசனம் பேசியிருக்கிறார் என்றால் அது நம்பக்கூடியதாக இருக்காது. ஆனால், அது நடந்திருந்திருக்கிறது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
சுமார் 40 வருடங்களுக்கு முன் அதாவது 80 காலகட்டத்தில் கமர்ஷியல் திரைப்படங்களுக்கு இணையாக பக்தி படங்களும் வெளியானது. அம்மன், முருகன், ஐயப்பன், பெருமாள், விநாயகர் என அனைத்து கடவுள்களின் படங்களும் வெளியான காலகட்டம். அந்த படங்களில் அவ்வப்போது, ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர்களும் கேமியோ ரோலில் தலைகாட்டி வந்தனர்.
அப்படி உருவான ஒரு படம்தான் 1980ம் ஆண்டு வெளியான ‘சரணம் ஐயப்பா’ எனும் பக்திப் படம். சபரிமலை ஐயப்பனின் புகழைப் பரப்பும் விதமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகை மனோரமா ஆச்சியின் மகன் பூபதி ஹீரோவாக நடித்திருப்பார். இந்தப் படத்தை இயக்கிய தசரதன் என்னும் இயக்குநர். இவர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரும்கூட.
கடுமையான குற்றங்களைச் செய்து ஜெயிலுக்குச் சென்று அங்கிருந்துத் தப்பித்த சில குற்றவாளிகள் சபரிமலை பகுதியில் தஞ்சமடைந்து போலீஸிடமிருந்து தப்பிப்பப்பதற்காக ஐயப்ப பக்தர்கள்போல வேடமிட்டுக்கொள்வார்கள். கதைப்போக்கில் அவர்கள் மனம் மாறி திருந்துவதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இதன் திரைக்கதையில் ஆங்காங்கே ரஜினி, முத்துராமன், நம்பியார், ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா, பாக்யராஜ் போன்ற ஏராளமான நட்சத்திரங்கள் கேமியோ ரோலில் நடித்திருப்பார்கள். அந்த வரிசையில்தான் கமலும் இந்தப் படத்தில் கேமியோ ரோல் செய்து தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தியிருப்பார். சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் ஐயப்பப் பக்தரான சுருளிராஜன் பலரிடம் நன்கொடை கேட்டுப் போவார்.
அந்த வரிசையில் நடிகர் கமலாகவே நடித்திருக்கும் கமலிடமும் நன்கொடை கேட்டு அவர் போக, கமல் நன்கொடைக் கொடுத்து அனுப்புவதுபோல அந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்தக் காட்சியில் கமல், `ஐயப்பன் எனக்கும் வேண்டப்பட்டவர்தான்’ என்ற வசனத்தையும் பேசி நடித்து ஆச்சர்யத்தையும் எகிற விட்டிருப்பார்.
மேலும் அந்தப் படத்தில் கைதிகள் சிறையில் இருக்கும்போது பூபதி உள்ளிட்ட நடிகர்கள் ஆடிப்பாடும்.. இசையமைப்பாளர் சந்திரபோஸ் இசையில் உருவான ‘அண்ணா வாடா.. தம்பி வாடா’ என்னும் பாடலையும் பாடியவர் கமல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2
0