செல்போன் டார்ச் லைட் மூலம் சிகிச்சை செய்த மருத்துவர் : மின்தடையால் அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2023, 2:46 pm
செல்போன் டார்ச் லைட் மூலம் சிகிச்சை செய்த மருத்துவர் : அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்!!
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று மின்வாரியத்தின் சார்பாக மின்தடை அறிவிக்கப்பட்டு காலை 9 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு மின்விநியோகம் கொடுக்கப்படும் என்று மின்வாரியத்தின் சார்பாக அறிவிக்கப்பட்ட நிலையில், இரவு 8 மணி வரை மின் விநியோகம் தரப்படவில்லை.
இதனால் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முழுவதும் மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியது. உள்நோயாளிகல் பெரிதும் அவதி பட்டு வெக்கை மற்றும் கொசுக்கடி தாங்காமல் வெளியேறி மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர் .
இந்த சூழலில் ஜெனரேட்டர் ஆப்பரேட் செய்ய யாரும் இல்லாததால் ஜெனரேட்டரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாலை 5 மணியை கடந்தும் மின்வினியோகம் அளிக்கப்படாததால் அரசு மருத்துவமனையில் இருந்த உள் நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
மேலும் அப்பொழுது சாலை விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு பெண்களுக்கு செல்போன் விளக்குகளால் இருட்டில் சரியாக சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தவித்தனர்.
மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் அதை இயக்க ஆட்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி அடைந்ததை அறிந்த திமுகவினர்,
மருத்துவமனையில் குவிந்தனர்.
அதன்பின்னர் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.