வேறு மொழி படங்களின் ஆதிக்கம் : தமிழ் படங்களுக்கு டான் ஆன SK.. திரை விமர்சனம்..!
Author: Rajesh13 May 2022, 11:28 am
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் திரையரங்கில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படம் கடந்த மார்ச் மாதமே வெளியாக வேண்டிய நிலையில், அந்த சமயத்தில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியானதால் டான் மே 13-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சிறுவயதிலிருந்தே அப்பாவிற்கு பயந்து வளரும் ஹீரோ சிவகார்த்திகேயன், அப்பா சமுத்திரகனியின் கட்டாயத்தின் பேரில் இன்ஜினீயரிங் காலேஜில் சேர்க்கப்படுகிறார். சிறுவயதிலிருந்தே தான் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தேடி வருகிறார். இறுதியில் அவர் நினைத்தது நடந்ததா? தான் ஆசைப்பட்டதை சாதித்தாரா? என்பதே டான் படத்தின் ஒன்லைன்.
சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் பிரியங்கா சூரி, சமுத்திரக்கனி, எஸ். ஜெ. சூர்யா என பலர் நடித்துள்ளனர். வழக்கம்போலவே இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் மிகவும் சார்மிங்காக, ரசிகர்களை ஈர்க்கும் வசீகரமாக காட்சியளிக்கிறார். இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
முதல் பாதி முழுக்க காலேஜை சுற்றி நடக்கும் சேட்டைகள் மற்றும் லூட்டிகளால் நிறைந்துள்ளது. காலேஜ் டிசிப்ளின் கமிட்டி தலைவராக அறிமுகமாகும் எஸ். ஜெ. சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நடக்கும் சண்டைகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்ஜே சூர்யாவை வெளியில் அனுப்ப சிவகார்த்திகேயன் போடும் திட்டம், காலேஜ் கல்ச்சுரல் டான்ஸ் என முதல் பாதி எங்கும் போரடிக்காமல் நகர்கிறது. ஜாலியோ ஜிம்கானா மற்றும் பே விசுவல் ட்ரீட் ஆகா உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அடுத்து இந்த படத்தில் ஸ்கோர் செய்வது எஸ்ஜே சூர்யா தான். காலேஜ் டிசிப்ளின் கமிட்டி தலைவராக தொடங்கி பிரின்சிபால் ஆக இந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் பண்ண முடியாத அளவிற்கு தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் இடையில் நடக்கும் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகாக உள்ளது, இருவருக்கும் போடப்பட்ட மேக்கப்கள் அவ்வளவு உறுத்தலாக இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பிளஸ். சிவகார்த்திகேயன் நண்பர்களாக வரும் பால சரவணன், ஆர்ஜே விஜய் மற்றும் சிவாங்கியின் நடிப்பு படத்திற்கு பக்க பலமாக உள்ளது. இரண்டாம் பாதி முழுவதும் வரும் சூரி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக சமுத்திரக்கனி தன்னுடைய மற்றொரு பெஸ்ட் பெர்பார்மன்ஸை இப்படத்தில் கொடுத்துள்ளார். முதல் பாதி படு ஜாலியாகவும் இரண்டாம் பாதி அதே அளவிற்கு சீரியஸாகவும் நகர்கிறது. தான் என்னவாக ஆகவேண்டும் என்று சிவகார்த்திகேயன் முடிவெடுக்கும் காட்சி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி எமோஷனல் காட்சிகளில் பூந்து விளையாடி உள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் பிரமாதம். ஒவ்வொரு கல்லூரி மாணவர்களும் தங்களை கனெக்ட் செய்துகொள்ளும் அளவிற்கு பல காட்சிகள் டான் படத்தில் உள்ளது. அவர்களை மையப்படுத்தி தான் இப்படமும் எடுக்கப்பட்டுள்ளது.
அனிருத்தின் இசையில் டான் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வேற லெவல் ஹிட்டான நிலையில் பிஜேஎம்மில் மேலும் அசத்தியுள்ளார். முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் வரும் சண்டைக் காட்சிகள் படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் வருவது மட்டும் தனியாக தெரிகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு இப்படத்தில் பல காட்சிகளை கொடுத்துள்ளார் இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி. தனது முதல் படம் என்பதால் அனைத்து காட்சிகளையும் புதுவிதமாக கொடுக்க முயற்சி செய்துள்ள இயக்குனர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
ஜாலியாக ஆரம்பித்து எமோஷனலாக முடியும் டான் கண்டிப்பாக பலருக்கு நெருக்கமாக அமையும்? சிலருக்கு கனெக்ட் ஆகாமலும் போகும். சமீப காலமாக தமிழகத்தில் வேறு மொழி படங்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், தமிழ் மொழி படங்களுக்கு கிடைத்த வரவேற்பு குறைந்தது. இந்த நிலையில் தற்போது, வெளிவந்துள்ள டான் திரைப்படம் திரையரங்குகளுக்கு தமிழ் படத்தை காண மக்கள் கூட்டத்தை அதிகரித்தது என்றே கூறலாம்.. மொத்தத்தில் இந்த டான் சிவகார்த்திகேயனின் வசூல் மழையில் மற்றொரு டானாக அமையப்போகிறது.