நடக்காத விஷயத்தை நேரில் பார்த்தது போல பேசக்கூடாது… அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2023, 1:10 pm
நடக்காத விஷயத்தை நேரில் பார்த்தது போல பேசக்கூடாது. அண்ணாமலை வருத்தம் தெரிவிக்கணும் : ஜெயக்குமார் பேச்சு!!
தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாஜகவினர் அதிமுக குறித்து விமர்சித்து, இதற்கு அதிமுகவினர் எதிர்வினையாற்றுவது என தொடர் மோதல் போக்கு நிலவி வந்தது. அதுவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது அதிமுக தலைவர்கள் குறித்து விமர்சித்தார். இதற்கு அதிமுக நிர்வாகிகள் பதிலடி கொடுத்து எச்சரிக்கை விடுத்தனர். இதனால், பாஜக – அதிமுக இடையே மோதல் போக்கு நிலவியது. இருப்பினும், பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்ணாமலை சொல்வதெல்லாம் இங்கு எடுபடாது, எங்களுக்கு மத்திய பாஜக தலைவர்கள் அமித்ஷா , ஜேபி நட்டா தான் எனவும் அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அறிஞர் அண்ணா பற்றி பேசியதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரின் உருவ சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் அதிமுக அவை தலைவர், முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, ஜெயக்குமார், எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அறிஞர் அண்ணா பற்றி பேசியதற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
அண்ணாமலை கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பேசட்டும், எங்களுக்கு கவலையில்லை, அவதூறாக பேசக்கூடாது. நடக்காத விஷயங்களை நேரில் பார்த்ததுபோல் மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்த வேண்டும்.
நடக்காத விசயத்தை சொல்லி அண்ணா பெயரை களங்கப்படுத்தக் கூடாது. பாஜகவை வளர்ப்பதற்காக மறைந்த தலைவர்களை பற்றி அண்ணாமலை கொச்சைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்றார். உலகம் உள்ள வரை நிலைத்து நிற்க கூடிய வகையில் பேச்சு ஆற்றல் எழுத்து ஆற்றல் கொண்டவர். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பதற்கு ஏற்ப உழைத்தவர். அண்ணா வழியில் கழகம் வெற்றி நடைபோடுகிறது என கூறனார்.
மேலும், முத்துராமலிங்க தேவர், அண்ணா நெருங்கிய நண்பர்கள். முத்துராமலிங்க தேவர் மீது அதிமுக நன் மதிப்பு கொண்டு உள்ளது. அண்ணா பற்றி பேசியதற்கு அதிமுக கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார். அண்ணா பற்றி அண்ணாமலையின் கருத்தால் கூட்டணி கட்சிகளான அதிமுக – பாஜக இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதுவும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக எடப்பாடி பழனிசாமி சந்தித்த மறுநாளே தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. இதனிடையே, செய்தியாளர் சந்திப்பின்போது, அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நேரத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு காலம் காலமாக இருக்கும் நடைமுறை தான்.
அதிமுக, பாஜக கூட்டணியில் உள்ளது, அதனால் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி பார்த்தார். தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குழு கூடி தொகுதி பங்கீடு குறித்து பேசுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், மகளிருக்கு 1000 ரூபாய் உரிமை தொகை கொடுப்பது யானை பசிக்கு சோள பொரி கொடுப்பது போன்றது என விமர்சனம் செய்தார்.