5 வருடமாக எட்டிப் பார்க்காத திமுக எம்பிக்கு ஓட்டு போடாதீங்க : கோவையில் எஸ்பி வேலுமணி பரப்புரை!
Author: Udayachandran RadhaKrishnan8 April 2024, 9:52 am
5 வருடமாக எட்டிப் பார்க்காத திமுக எம்பிக்கு ஓட்டு போடாதீங்க : கோவையில் எஸ்பி வேலுமணி பரப்புரை!
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரடிமடை பகுதியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து பிரச்சாரத்தை துவக்கினார். இதில் கலந்துகொள்ள வந்த முன்னாள் அமைச்சரும, அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி வேலுமணி மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற கழக வெற்றி வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோருக்கு ஊர்பொதுமக்கள் சார்பாக பூர்ணகும்ப மரியாதை செய்து உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மேலும் புகழ்பெற்ற மாரியம்ம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட பிறகு அப்பகுதி மக்களை வீடுவீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அதை தொடர்ந்து வாகன பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது மக்களிடையே பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆதரவு பெற்ற பொள்ளாச்சி நாடாளுமன்ற கழக வெற்றி வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக தற்பொழுது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
கரடிமடை எப்பொழுதும் அண்ணா திமுகவின் கோட்டை எப்பொழுது பிரச்சாரம் தொடங்குவதாக இருந்தாலும் கரடி மடையில் இருந்து தான் தூங்குவேன்.
மேலும் நன்றி அறிவிப்பு கூட்டமாக இருந்தாலும் இதே பகுதியில் இருந்து தான் துவங்குவேன் என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் இருந்த பொழுது இந்த பகுதியில் பள்ளிகள், பேருந்துநிழற் குடைகள், சாலைகள் என ஏராளமான வேலைகளை செய்து கொடுத்துள்ளோம்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பகுதியில் வெற்றி பெற்ற திமுக பாராளுமன்ற உறுப்பினர் இந்தப் பகுதியில் எதற்காவது வந்துள்ளாரா ஏதாவது திட்டங்களை செய்து கொடுத்துள்ளாரா என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் சமீபத்தில் பள்ளியில் கூடுதல் கட்டிடங்கள் வேண்டும் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் கேட்ட நிலையில் தமிழக அரசு மற்றும் திமுக எம்பி நிதி ஒதுக்கி தரவில்லை.
இந்த நிலையில் முன்னால் அமைச்சரும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணன் சிவி சண்முகம் அவர்களிடம் கோரிக்கை வைத்து அவரிடம் நிதி பெற்று பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டி தரப்பட்டது.
எனவே வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.