பத்திரப் பதிவு அலுவலகத்தில் இனி காத்திருக்க வேண்டாம்.. பணமும் கொண்டு வர வேண்டாம் : அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 June 2023, 8:59 pm

அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களின் பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

பதிவுக்கு வரும் பொதுமக்கள் முந்தைய தினம் ஆன்லைனில் பதிவு செய்துள்ளவேண்டும். அப்போது கிடைக்கப்பெறும் டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் அலுவலகம் வந்தால் போதுமானது.
தேவையின்றி காத்திருக்காமல் சுமார் 15 நிமிடத்திற்குள்ளாகவே பதிவு பணியை முடித்துக் கொண்டு செல்லும் வகையில் பதிவு தொடர்பான அனைத்து பணிகளும் கணினி வழியே மிக வேகமாக நடைபெறுகின்றன.

பதிவு தொடர்பாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளும் கணினி வழியாகவே செலுத்தப்படுகின்றன. நூறு ரூபாய் செலுத்த வேண்டி இருந்தாலும் அதனை ஏடிஎம் கார்டு மூலமாக ஸ்வைப் செய்து செலுத்தும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பதிவுக்கு வரும் பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து தொகையையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டி உள்ளதால் அவர்கள் பதிவுக்காக சார் பதிவாளர் அலுவலகம் வரும்போது கையில் பணம் கொண்டு வரத் தேவையில்லை.

சார் பதிவாளர் அலுவலகத்தில் நேரடி பணப்பரிவர்த்தனை எதுவும் நடைபெறுவதில்லை. நடைபெற தேவையும் இல்லை. எனவே பதிவுக்கு வரும் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பணம் எடுத்து வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவுக்கு வரும் பொழுது அங்கு அவர்கள் பெறும் சேவைக்காக யாராவது கையூட்டு கேட்டால் இது குறித்த புகார்களை பதிவுத்துறை தலைவருக்கு அல்லது பதிவுத்துறை செயலாளருக்கு அனுப்பலாம். இதற்கென தொடர்பு எண்கள் சார்பதிவாளர் அலுவலகங்களில் அனைவர் பார்வையில் படும்படி எழுதி வைக்கப்பட்டுள்ளதாக மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களின் நலனைக் கருதி பதிவுத்துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார் 3.0 எனும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது எதிர்கொள்ளப்படும் சிறு சிறு காலதாமதங்கள் கூட இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க ஸ்டார் 3.0 மென்பொருள் பயன்படும். பொதுமக்கள் வழிகாட்டி மதிப்பின்படியான அடிப்படையில் தங்களது சொத்துக்களின் மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தி ஆவணங்களைப் பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுவதாக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!