QR Code ஸ்கேன் செய்வது போல நாடகம் : திமுக கவுன்சிலருக்கு சொந்தமான அசைவ உணவகத்தில் நூதன மோசடி…ஷாக் சிசிடிவி காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2024, 8:38 pm
QR Code ஸ்கேன் செய்வது போல நாடகம் : திமுக கவுன்சிலருக்கு சொந்தமான அசைவ உணவகத்தில் நூதன மோசடி…ஷாக் சிசிடிவி காட்சி!
திண்டுக்கள் மாவட்டம், வடமதுரை அண்ணா நகரை சேர்ந்தவர் தேன்மொழி. இவர் வடமதுரை பேரூராட்சியின் திமுக 4-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.
இவர் வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே ஹோட்டல் நடத்தி வருகிறார்.நேற்று இவரது ஹோட்டலுக்கு இரண்டு வாலிபர்கள் சாப்பிட வந்தனர். அப்போது தேன்மொழியிடம் நாங்கள் ஆயிரம் ரூபாய் உங்களது அக்கவுண்டுக்கு செலுத்துகிறோம் கையில் பணமாக தாருங்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு தேன்மொழி சரி என்று சொன்னதும் இருவரும் மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி என ஆர்டர் செய்து 500 ரூபாய்க்கு சாப்பிட்டுள்ளனர்.
சாப்பிட்டு முடித்துவிட்டு வந்த வாலிபர் கல்லா அருகில் இருந்த QR கோடு ஸ்கேனரை ஸ்கேன் செய்து, பணம் செலுத்தி, 1500 ரூபாய் பில் பெய்டு என்று வந்த மெசேஜை தேன்மொழியிடம் காட்டியுள்ளார்.
அப்போது மற்றொருவரிடம் பில் வாங்கிக் கொண்டிருந்த தேன்மொழி, வாலிபர் காட்டிய மெசேஜை பார்த்துவிட்டு அவர்களிடம் சாப்பிட்ட பில் 500 ரூபாய் போக மீதி 1000 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட வாலிபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர். சிறிது நேரம் கழித்து தேன்மொழி தனது வங்கி கணக்கை பார்த்தபோது 1500 ரூபாய் பணம் கணக்கில் வரவாகாமல் இருந்தது தெரியவந்தது.
மேலும் அந்த வாலிபர்கள் QR கோடை ஸ்கேன் செய்வது போல் நடித்து, வேறு ஒருவருக்கு 1500 ரூபாய் பணம் அனுப்பிவிட்டு, அந்த மெசேஜை காட்டி 1500 ரூபாயை ஏமாற்றி சென்றதும் தெரிய வந்தது.
இந்த காட்சிகள் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தன. அவை தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.